tamilnadu

img

மத்திய அரசால் கைவிடப்பட்ட மாநில அரசுகள் - வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்

2020 மார்ச்  மாதம் வெளியான தனது ’தி வேர்ல்ட் ஆஃப்டர் கொரோனா வைரஸ்’ என்ற கட்டுரையில் கோவிட்-19ஆல் ஏற்பட்டுள்ள இதற்கு முன்னெப்போதுமில்லாத மனித நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியாக வரலாற்றாய்வாளர் யுவல் நோவா ஹராரி வலியுறுத்தியிருந்த முக்கிய அம்சங்களில் ஒன்றாக, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையுணர்வை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டிருந்தது.  ’தங்களுக்கிடையே தகவல்களைப் பகிரங்கமாகப்  பகிர்ந்து கொள்ளவும், தயக்கமின்றி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளவும் நாடுகள் தயாராக இருக்க வேண்டும். தாங்கள் பெறுகின்ற தரவுகளையும், உள்நோக்குகளையும் நம்ப வேண்டும்’ என்றும் அவர்  கூறியிருந்தார். இந்திய காணொலி ஊடகங்களுடன் பேசிய ஹராரி, ஆதாரமற்ற கருத்துக்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பலவீனப்படுத்தும்  என்று சுட்டிக்காட்டினார். இந்திய சமுதாயத்தில் நிலவுகின்ற அவநம்பிக்கையையே அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அவருடைய இந்தக் கருத்து, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, சமூக நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புகளுக்கு விடுகின்ற மறைமுகமான செய்தியாகவே இருக்கின்றது. ’தகவல்களைப் பகிரங்கமாகப்  பகிர்ந்து கொள்ளவும், தயக்கமின்றி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளவும்’ என்ற அவரது ஆலோசனையும் மீண்டும் இந்த செய்தியை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது. தேசிய கண்ணோட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலும், பல்வேறு மாநில அரசுகளுக்கிடையிலும்  ஹராரி விடுத்துள்ள இந்த செய்தி முதன்மையாகச் செயல்பட வேண்டும்.

ஏப்ரல் 14 முதல் மே 3 வரையிலான இரண்டாம் கட்ட  ஊரடங்கில் இந்தியா இருக்கும் போது, ஹராரி கூறியிருக்கின்ர கருத்துக்கள் அரசியல் வர்க்கத்தினரிடையே  கலவையான  எதிர்வினைகளையே சந்தித்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் உணர்வுகள் பெரும்பாலும், குறிப்பாக மத்திய அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் தலைமையால் கடைப்பிடிக்கப்படாமல் மீறப்படுகின்றன. உண்மையில், இந்த இரண்டாவது ஊரடங்கு காலத்தில், நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் – எடுத்திருக்கும் பல முக்கியமான நடவடிக்கைகள், மாநிலங்களின் வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் தெளிவாகப் புறக்கணித்திருக்கின்றன. ஊரடங்கின் போது மத்திய அரசு போட்டிருக்கும் சில நிபந்தனைகள், இந்த நெருக்கடிக்கு முன்னர் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள்  மற்றும் நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதாக இருக்கவில்லை என்று கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில்  முன்மாதிரியான  செயல்திறன்  கொண்டதாக உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள கேரளா உட்பட பல மாநில அரசுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. 

கூட்டாட்சிக்  கொள்கைகளை மீறி

நிவாரணப் பணிகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதற்குமான இரண்டாவது முக்கியமான நடவடிக்கையாக இருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ள, ஏப்ரல் 17 அன்றைய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, இவ்வாறான சூழல் நிலவுவதையே காட்டுகின்றது என்று பல மாநிலங்களும் கோடிட்டுக் காட்டியுள்ளன. ரிசர்வ் வங்கியின் அந்த அறிவிப்பு, சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதாக குறிப்பிட்ட பிரதமர், அந்த அறிவிப்பின் மூலம் பணப்புழக்கம், கடன் தருவது ஆகியவை அதிகரிக்கும் என்று பாராட்டினார். வரம்புகளை அதிகரிப்பதற்கான இந்த நடவடிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் உதவும் என்று ரிசர்வ் வங்கியும் கூறியுள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம், அதன் முன்னாள் கூட்டாளியான சிவசேனா தலைமையில் உள்ள மாநில அரசுகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானவையாக இருக்கவில்லை என்றும், அவை கூட்டாட்சி கொள்கைகளின் வழி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வெளிப்படையாக மீறுவதாகவும் இருக்கின்றன என்று இந்த மாநில அரசுகளின்  தலைமைகள் கருதுகின்றன.

இந்த அறிவிப்பின் மூலம், கேரளா போன்றதொரு மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.729 கோடி மட்டுமே கிடைக்கும் என்று கேரளாவின் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் குறிப்பிடுகிறார். ‘பணத்தை எடுத்து விட்டால், அதனை விரைவாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், பிற வகை கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு போன்ற கூடுதல் நிதி நிவாரண நடவடிக்கைகள்தான் இப்போது நமக்கு உண்மையில் தேவைப்படுகின்ரன. வட்டியைத் திரும்ப கட்ட வேண்டும் என்பதால், தற்போதைய மூன்று மாத கால அவகாச நீட்டிப்பால் எவ்விதப் பயனும் இருக்கப் போவதில்லை. சிறு வணிகர்களுக்கும், வணிகத்திற்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிதி சார்ந்த நடவடிக்கைகளே நமக்கு இப்போது தேவைப்படுகின்றன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மாறாக பொதுமக்களைப்  புகழ்ந்து பேசுகின்ற பகட்டான பேச்சுக்கள், ஊரடங்கை எந்த ஆட்சேபமுமின்றி கடைப்பிடிக்கின்ற மாநில அரசுகளைப் புகழ்வது போன்றவையே நமக்கு கிடைத்திருக்கின்றன’ என்று அவர் கூறுகிறார்.

கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்தியில், கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையையே மத்திய அரசு தகர்ப்பதாக, எதிர்க்கட்சிகளின் தலைமையில் இருக்கின்ற பல மாநில அரசுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. கோவிட் நெருக்கடியின் போது மிகவும் முக்கியத்துவம் தர வேண்டியதாக  இருக்கின்ற உடல்நலம், சுகாதாரம், பரிசோதனை, தனிமைப்படுத்தல், நிவாரணம் போன்றவை அரசியலமைப்பில் மாநில பட்டியலில் இடம் பெற்றிருப்பதை இந்த மாநில அரசுகளின் தலைவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். ஆனால் மத்திய அரசோ கோவிட்-19 நிவாரணம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்காக மாநில அரசுகள் கடன் வாங்குவதை தடை செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், மத்திய அரசு தன்னிடம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளதாக, மாநிலங்கள் அதனிடம் கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதான நிலை உருவாகியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நிதி கோரி மத்திய அரசிற்கு பல மாநில முதலமைச்சர்கள் அனுப்பி வைத்திருக்கும் கடிதங்கள் பல வாரங்களாக பதிலளிக்கப்படாமல் கிடக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் நோய்க்கு எதிரான போரில் மிகமுக்கியமான அரசு செலவினங்களுக்கு எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஃப்ரண்ட்லைனுடன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் பேசினார். ’நன்கு சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட வடிவமைப்புகள், திட்டங்கள் மற்றும் களத்தில் அவற்றை மிக நுணுக்கமாகச் செயல்படுத்துதல் போன்றவை எதுவும் இல்லாத முற்றிலும் பரிதாபகரமான நெருக்கடி மேலாண்மையையே நாம் இப்போது பார்த்து வருகிறோம்.. மத்திய அரசாங்கத்தின் மற்றும் அதன் பிரதியான, நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேச அரசின்   தனிச்சிறப்பாக இந்த செயலற்ற போக்கு இருக்கிறது. இடையிடையே,  சாதித்துக் காட்ட வேண்டும் என்று நாடகத்தனமான அழைப்புகளை விடுத்து, அதிகாரங்களிலிருப்பவர்கள் உரக்கப் பேசுவதற்கு சாட்சியாக நாம் இருக்க வேண்டியுள்ளது. இத்தகைய மோசமான அணுகுமுறையால், உண்மையான  பிரச்சினைகள் முற்றிலுமாக ஓரங்கட்டப்படுகின்றன’ என்று அவர்  கூறினார்.

ராகுல் காந்தியை  கிண்டலடித்தல்

அரசு மட்டத்தில் நடக்கின்ற இந்த மீறல்கள் ஒருபுறமிருக்க, பகிர்தல், கண்டறிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்  போன்றவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி மாநில அரசுகளை வஞ்சிப்பதாகவே ஆளும் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஏப்ரல் 16 அன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு, பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா மற்றும் பாஜகவின் ட்ரோல் படைகள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அளித்த எதிர்வினைகள் மூலமாக, ஆளும் கட்சியும், அதன் கூட்டாளிகளும் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து இறங்க முடியும் என்பதைக் காட்டியுள்ளனர்.  இந்த காலத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைமையில் இயங்குகின்ற சங் பரிவார் இத்தகைய நடவடிக்கைகளில் மூழ்கியுள்ளது. ஒரு மணி நேரம் நடைபெற்ற வீடியோ பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம், ராகுல் காந்தி ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்க முயன்றார். பாஜகவுடன் அரசியல்ரீதியான நேரடித் தாக்குதலில் தான் ஈடுபட விரும்பவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். பெரும்பாலான விஷயங்களில் பிரதமர் மோடியுடன் தான் உடன்படவில்லை என்றாலும், அத்தகைய வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார். தனக்கென்று தனிபாணியில் பிரதமர் செயல்படுகிறார். அந்த வழியிலும் நம்மால் தீர்வுகளைக் காண முடியும் என்று அவர் அப்போது கூறினார்.

கொரோனா வைரஸுக்குப் பிந்தைய காலத்தில் இந்திய ஜனநாயக அமைப்பு முறை மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்பதைத் தெரிந்து  கொள்ள விரும்பிய பரபரப்பான கேள்விக்கு கூட, அவ்வாறு நடக்கலாம் என்று பதிலளித்த ராகுல்காந்தி, ’கவலைப்பட வேண்டாம், இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனாலும் இப்போது நாம் முதலில் வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்.... ஒன்றாக எதிர்த்துப் போராடினால்தான் இந்த வைரஸைத் தோற்கடிக்க முடியும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால் வைரஸிடம் நாம் தோற்று விட நேரிடும்’ என்று கூறி தனது கருத்தை நியாயப்படுத்தவும் செய்தார்.

பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ’இரு பக்க’ உத்தியை அவர் பின்னர் அடையாளம் காட்டினார். சுகாதாரத்தைப் பொறுத்தவரை, சுய ஊரடங்கு ஒரு தீர்வு அல்ல என்றாலும், அது வைரஸுக்கு எதிரான இடைநிறுத்த பொத்தானைப் போன்று செயல்படும் என்பதை  ராகுல்காந்தி  வலியுறுத்தினார். வைரஸ் தொடர்புகளைக் கண்டறியும் தற்போதைய உத்தி நிச்சயமாக மாற்றிக் கொள்ளப்பட்டு, அறிகுறியுடன் இருக்கின்ற நோயாளிகளிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்து பரிசோதிப்பதன் மூலம், வைரஸை முன்கூட்டியே இல்லாமல் செய்வதற்கான உத்திக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார் இந்தியாவில்  தற்போதைய பரிசோதனை விகிதம்  பத்து லட்சம் பேருக்கு 199 பேர் அல்லது  மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் என்றிருப்பது, எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என்றும், வைரஸ் மீண்டும் வரும் போது அதை தகுந்த உத்திகள் மூலம் எதிர்த்துப் போராடுவதற்கான தேவைகளையும், கட்டமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் வைரஸ் மீண்டும் சமூகத்திற்குள் பரவும் என்று அவர் எச்சரிக்கவும் செய்தார்.

சுகாதாரத்தைப் பொறுத்தவரை இடைவிடாமல் போர் மேற்கொள்ளப்பட்டபோதும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும் என்பதே அவரது ஆலோசனையாக இருந்தது. இந்த பாதுகாப்பு வலையின் ஒரு பகுதியாக, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு அதிக அளவிலான பணப் பரிமாற்றம்,  பொதுவிநியோக முறையில் உணவு தானியங்களைத் தர வேண்டும், பெருமளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  வேலை பாதுகாப்பை வழங்கும் வகையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  நேர்ந்த அவலத்தைச் சுட்டிக்காட்டிய அவர், தாங்கள். பணிபுரிந்த பெருநகரங்களிலிருந்து, தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு  கால்நடையாக  நீண்ட,கடினமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் உள்ளாகினர் என்று கூறினார். 

எப்படி பார்த்தாலும், ஏப்ரல் 16 அன்று ராகுல் காந்தி நடத்திய ஊடக சந்திப்பு பல நல்ல விஷயங்களைக் கொண்டிருந்தது. பரபரப்பு அரசியல் செய்யாமல், நெருக்கடியான இந்த நேரத்தில் அரசாங்கம் எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கைகளைப் பற்றி அவர் வரையறுத்துக் காட்டியிருந்தார். இருப்பினும், பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி அடிக்கடி பயன்படுத்திய உத்திகள் மற்றும் செயல்படுதல் என்ற இரண்டு சொற்களைத் தேர்ந்தெடுத்து பாஜக பிரச்சார இயந்திரம் அவரைக் கேலி செய்தது. ’சிரிக்கும் தோற்றத்துடன் இரு கைகளையும் மேலே உயர்த்தி, செயல்படுகின்ற வகையில் தரையில் உருள்வதைப் பற்றி பேசுவதன் மூலம், நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதால்  உத்திகள் கொண்ட சிரிப்பை  நான் விரும்புகிறேன்’ என்று சாம்பிட் பத்ரா ட்வீட் செய்து கிண்டலடித்திருந்தார்:  

வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்கு, ஊரடங்கு என்பது சிறந்த கருவி அல்ல என்று ராகுல் காந்தி நம்பினால், காங்கிரஸால் ஆளப்படும் மாநிலங்கள் ஏன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்தன என்ற கேள்வியை எழுப்பி, பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அவருடன் இணைந்தார்.  ஆனால் திட்டமிடல் மற்றும் விவரங்களின் அடிப்படையில் ராகுல்காந்தி சொல்ல முயன்ற விஷயங்களை இந்த இரண்டு தலைவர்களுமே முற்றிலும் தங்களுடைய கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

இந்தியாவிற்கு நேரிடக் கூடிய கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு தேவையான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிப்ரவரி 12 அன்று ராகுல் காந்தி வெளியிட்ட எச்சரிக்கையை,  பாஜக மற்றும் அரசாங்கத்தில் உள்ள பெரும் தலைவர்கள் கேலி செய்ததாக முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் இத்தகைய அவமதிப்புகள் மூலமாக ராகுல்காந்தி கூறியிருந்த கருத்துக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதன்  விளைவுகள் இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றன. ’பீதி பரப்பியதாக பாஜக குற்றம் சாட்டியது. சுகாதார நெருக்கடிநிலை எதுவுமில்லை என்று மூத்த மத்திய அமைச்சர்கள் கூறினர். சங் பரிவாரக் கிண்டல் ராணுவம் அனைத்து வகையான பெயர்களாலும் அவரை அழைத்தது. இப்போது இந்தியா  நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் கீழ் உள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு இந்த கொடிய வைரஸ் இருப்பதாகப் பரிசோதனை செய்துள்ளனர். ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் ஏறக்குறைய 550 பேர் இறந்து போயுள்ளனர்’ என்று திவாரி கூறியுள்ளார். ராகுல்காந்தி  முன்வைத்தது நல்ல, அர்த்தமுள்ள, நன்கு சிந்திக்கக்கூடிய செயல் திட்டமாகும். அரசாங்கம் அதைக் கௌரவமாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய திவாரி. ’அதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரம் மற்றும் குறுங்குழுவாத அரசியல் விளையாட்டுகளின் வெறித்தனமான கூச்சல்களைக் குறிக்கின்ற வகையில், தேவையற்ற ஏளனத்தை மட்டுமே நாம்  கண்டிருக்கிறோம்’ என்று  கூறினார்.

கேரளாவிற்கு பாராட்டு

’தகவல்களைப் பகிர்ந்து கொள்வது  அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது’ என்று ஹராரி கூறியவற்றை ராகுல்காந்தி உட்பட காங்கிரசின் மூன்று மூத்த தலைவர்கள் அனைவரும் பின்பற்றினர். கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பினராயி விஜயன் தலைமையில் இருக்கின்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கோவிட்-19க்கு  எதிரான போராட்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறது என்று ராகுல் பகிரங்கமாகப் பாராட்டினார். கேரளாவில் உள்ள தனது கட்சியினர் மாநில அரசு மீது வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களை நடைமுறையில் அவர் நிராகரித்தார். முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூரும்  மாநில அரசிற்கு எதிரான விமர்சனங்களை நிராகரித்ததோடு, மாநில அரசின் பணிகள் உலகளாவி மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளுக்கு எவ்விதத்திலும் குறைவானவை இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தார்.

ரகுராம் ராஜன், அரவிந்த் பனகாரியா, எஸ்தர் டுஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஹிமான்ஷு, ஜீன் ட்ரீஸ், சஜ்ஜித் சினாய், தாமஸ் ஐசக் போன்ற பொருளாதார வல்லுனர்களைக் கொண்ட பணிக்குழுவை மோடி அரசு உருவாக்க வேண்டும் என்று  சிதம்பரம் பரிந்துரை செய்திருந்தார்.

‘இந்தியாவை ஜனநாயகமாக வைத்திருப்பது எப்படி என்பதை அறிந்திருக்கிறோம்’ என்ற ராகுல்காந்தியின் நம்பிக்கையான கூற்றுக்கு மதிப்பு சேர்க்கின்ற வகையிலேயே இத்தகைய  இருவாறான கருத்துக்களும் இருக்கின்றன.  இதுபோன்ற படிப்பினைகளை அவர் கேரளாவில் காங்கிரசில் இருக்கின்ற சக ஊழியர்கள் சிலரிடமும் கொண்டு செல்ல வேண்டியிருக்கலாம். மாநில கட்சித் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் மாநில அரசு மற்றும் கோவிட் தொடர்பான அதன் முன்முயற்சிகளுக்கு எதிராக கடுமையான, பெரும்பாலும் நகைப்பிற்கிடமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் காங்கிரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த சோகமான நகைச்சுவை தொடர்ந்து கொண்டிருக்கையில், குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் சங் பரிவாரத்தின்  நயவஞ்சகமான பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் அதிக வேகத்தை எட்டியிருக்கிறது. இந்திய ஜனநாயகமும், அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களும், பரிவுணர்வு மற்றும் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒத்துழைப்பு குறித்த ஹராரியின் தெளிவான எண்ணங்களின் அடிப்படையில் செய்ய வேண்டியவை ஏராளமாக இருப்பதையே இவ்வாறான நிலைமைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. 

நன்றி: ஃப்ரண்ட்லைன் 2020 மே 8   

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

;