tamilnadu

img

சோசலிஸ்டுகள் அபார வெற்றி இடதுசாரிப் பாதையில் போர்ச்சுக்கல்

லிஸ்பன், அக்.8- போர்ச்சுகலில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நல இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த சோசலிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதியன்று போர்ச்சுகல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் சோசலிஸ்டு கட்சி 106 இடங் களைப் பெறுகிறது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 85 இடங்கள் கிடைத்திருந்தன. போர்ச்சுகல் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்குழு ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையான ஆட்சி இருந்தது. இந்த முறையும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இடதுசாரிக்குழுவுக்கு 19  இடங்களும் கிடைத்துள்ளன. சோச லிஸ்டு கட்சியின் தலைவரும், பிரதம ருமான அன்டோனியோ கோஸ்டா, இந்த இரண்டு கட்சிகளுடனான உறவு தொடரும் என்று அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 86 இடங்கள் இருந்தன. கடந்த தேர்தலில் இக்கட்சிதான் முதல் பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது. தற்போது சோசலிஸ்டு கட்சி அந்த இடத்தைப் பிடித் திருக்கிறது. இந்த இரண்டு கட்சி களுக்கு அடுத்த இடங்களை இடதுசாரிக் குழுவும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே பிடித்துள்ளன.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் முழுப் பெரும்பான்மையை சோசலிஸ்டு கட்சி பெற்றுவிடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆயுதங்கள் வாங்குவதில் பெரும் ஊழல் நடந்ததாக கிளம்பிய செய்திகள் குறிப்பிட்ட பகுதி மக்களின் வாக்குகள் கிடைக்காமல் செய்துவிட்டன. ஊழல் என்று அவதூறுகளை  எதிர்க்கட்சிகளே கிளப்பிவிட்டன என்று தற்போது கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.  தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் குறிப்பிட்ட அன்டோனியோ கோஸ்டா, “எங்களது நாடாளுமன்ற கூட்டாளிகளை எதிர்நோக்கியுள்ளோம். 2015 ஆம் ஆண்டு முதலான உறவு தொடர வேண்டும் என்று போர்ச்சுகீசிய மக்கள் காட்டியிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இடதுசாரிக்குழு மற்றும் போர்ச்சுகீசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டுமே சோசலிஸ்டுகளுடன் இணைந்து பணி செய்வதைத் தொடரவே விரும்புகின்றன. ஆனால், ஊதிய உயர்வு, தொழிலாளர் உரிமை களை பலப்படுத்துதல் மற்றும் அரசுத் துறையில் முதலீட்டை அதிகரிப்பது ஆகிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளன. இடதுசாரிக்குழுவின் தலைவரான கேதரினா மார்ட்டின்ஸ் இதை உறுதிப் படுத்தியிருக்கிறார். நாட்டில் நிலையான அரசை உத்தரவாதப்படுத்தும் முடிவை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்கிறார் அவர். அதோடு விலங்குகள் நலன்களை முன்னிறுத்தும் கட்சியும் சோசலிஸ்டு கட்சியின் ஆட்சியை ஆதரிக்கத் தயாராக உள்ளது. அக்கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த முறையை விட புதிய ஆட்சி நிலையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள சோசலிஸ்டு கள் மற்றும் இடதுசாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “நிலையான அரசு, சமத்துவம் மற்றும் சமூக நீதியை மீண்டும் போர்ச்சுகீசிய மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். போர்ச்சுகலில் சோசலிஸ்டு கட்சி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இடது, முற்போக்கான மற்றும் நவீன சமூ கத்தை உருவாக்க மக்கள் விரும்பு வது தெரிகிறது. அனைவரும் நியாய மளிக்கும் ஒரு ஐரோப்பாவை உருவாக்க நாம் தொடர்ந்து உழைப்போம்” என்று கூறியுள்ளார். சோசலிஸ்டு கட்சிக்குத் தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய வம்சாவளியில் வந்த கோஸ்டா
மீண்டும் போர்க்சுகலின் பிரதமராகவிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான அன்டோனியோ கோஸ்டா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவரது தாத்தா கோவாவில் பிறந்து வளர்ந்தவர். தந்தையார் இந்தியாவில் தனது வாழ்நாட்களைக் கழித்தவர். இந்தக் குடும்பத்தினருக்கு கோவாவில் சொந்த வீடும் இருந்தது. 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் மாநாட்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி, கோஸ்டாவுக்கு விருது வழங்கினார். போர்ச்சுகலின் அமைச்சர், தலைநகர் லிஸ்பனின் மேயர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள கோஸ்டா, 2015 ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

வலதுசாரிகளைப் புறக்கணித்த மக்கள்
கட்சியின் பெயர் சமூக ஜனநாயகக் கட்சி என்றாலும் வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கி பல வருடங்களாகிவிட்டது. குறிப்பாக, 2011 முதல் 2015 வரையிலான இக்கட்சியின் ஆட்சியில் பெரும் பின்னடைவை போர்ச்சுகல் சந்தித்தது. கடந்த தேர்தலில் முதல் பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தாலும் தற்போது வாக்கு சதவிகிதத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு இரண்டாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. வலதுசாரிக்கட்சியான சிடிஎஸ், கடந்த தேர்தலில் 18 இடங்களைப் பிடித்திருந்தது. அதற்கு தற்போது வெறும் 5 இடங்கள்தான் கிடைத்துள்ளன.

ஆட்சியை நிர்ணயிக்கும் இடதுசாரிகள்
பெரும்பான்மையை சோசலிஸ்டுக் கட்சி பெறாத நிலையில், 31 இடங்களைப் பெற்றுள்ள இடதுசாரிக்குழுவுக்கும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது இடங்கள் குறைந்திருந்தாலும் ஆட்சியை நிலையானதாக வைத்திருக்கும் அளவுக்கு பலம் உள்ளது. மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் உரிமையை மீட்பது, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவது உள்ளிட்டவற்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று இக்கட்சிகள் அறிவித்துள்ளன. இவற்றை நிறைவேற்றினால்தான் சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தொடரும் என்று இக்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

;