tamilnadu

img

பாகிஸ்தான் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு

தெற்கு பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் 400 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானாவின் வஸாயோ கிராமத்தைச் சேர்ந்த 400 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது தவறான உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தெரியவந்துள்ளது. 

கடந்த 2 வாரங்களில் 500க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் க்ளினிக் வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் வேண்டுமென்றே நோய் தொற்றை பரப்பினாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், கிராம மக்கள் அனைவருக்கும் எச்.ஐ.வி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


;