tamilnadu

img

அதிர்ந்த குஜராத் வீழ்ந்தது ஏன்?

கோவிட் 19 சிகிச்சைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அகமதாபாத் முக்கிய மருத்துவமனை குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துதான் இது! இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் 377 பேர் 24.05.2020 வரை இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஒட்டு மொத்த குஜராத்தில் இறந்தவர்களில் 45% ஆகும். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் நிலை கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பலில் சிக்கிய பயணிகள் போல உள்ளது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மிக மிகக் கடுமையான வார்த்தைகள்! குஜராத் பா.ஜ.க.வினருக்கு சிறிது அரசியல் தூய்மையாவது இருக்குமானால் முதல்வரும் சுகாதார அமைச்சரும்  பதவி விலகியிருக்க வேண்டும்; அல்லது இந்த நிலையை மாற்ற என்ன செய்யப்போகிறோம் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லை. இதே மாநிலத்தை சேர்ந்த மோடியும் அமித்ஷாவும் கூட வாய் திறவாமல் உள்ளனர். ஏனெனில் இந்த நிலைக்கு அடித்தளம் போட்டது அவர்கள் குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுதுதான் என்பதை அவர்கள் எப்படி மறுக்க இயலும்?

குஜராத் முழுவதுமே மோசமான நிலை!
உண்மையில் இந்த நிலை அகமதாபாத் மருத்துவமனையில் மட்டுமல்ல; குஜராத் முழுவதுமே மோசமாகவே உள்ளது.  அதனால்தான் மரணவிகிதங்கள் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகமாக உள்ளன. இதனை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்கும்:

                                   மாநிலம்                              பாதிப்பு                                  பாதிப்பு                         மரணம்                       மரண விகிதம்
                                                              பத்து லட்சம் பேருக்கு                                                                                                         (பாதிப்பு/மரணம்)
மகாராஷ்டிரா                                                      50,231                                         440                                    1,635                                   3.25% 
தமிழ்நாடு                                                              16,277                                         240                                       111                                    0.68%
குஜராத்                                                                   14,056                                         224                                       858                                    6.10%
தில்லி                                                                       13,418                                         707                                       261                                    1.95%
ராஜஸ்தான்                                                            7,028                                         102                                       163                                    2.32%
மத்தியப் பிரதேசம்                                             6,665                                           91                                       290                                    4.35%
கேரளா                                                                         847                                           24                                           4                                    0.47%
இந்தியா                                                              1,45,380                                         107                                     4167                                    2.87%
                                                                                                     (மே 26/2020 விவரங்கள்) 

பாதிப்புகள் அதிகமாக உள்ள முதல் 6 மாநிலங்கள் மற்றும் கேரளாவின் விவரங்களை ஆய்வு செய்யும் பொழுது குஜராத் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிராவைவிட மரணவிகிதம் குஜராத்தில் அதிகமாக உள்ளது. அதே போல அகில இந்திய மரணவிகிதத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. 

மோடி/அமித்ஷா நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரம்
குஜராத் முதல்வராக மோடி சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தார். அவரது வலதுகரமாக இருந்தவர் அமித்ஷா. இவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை “அதிரும் குஜராத்” எனும் நிகழ்ச்சியை படாடோபமாக நடத்தினர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்கவே இந்த நிகழ்ச்சி. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன; ஆனால் இவற்றில் சுமார் 4 முதல் 6% மட்டுமே நடைமுறைக்கு வந்தன. 70 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் வெறும் 5.87 இலட்சம் வேலை வாய்ப்புகள்தான் உருவாகின. (டைம்ஸ் ஆஃப் இண்டியா/ 27.09.2013)

எனவே வேலையின்மை குறையவில்லை. அதே சமயம் ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக குஜராத் மக்களில் பலரும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் உணர்வு ஊட்டப்பட்டதால் இந்த இரு பிரிவினரும் கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளாகினர். இதன் பொருள் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நன்மை பெற்றனர் என்பது அல்ல! அவர்களும் பாதிக்கப்பட்டனர்.மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் நயவஞ்சக அணுகுமுறைகள் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்/ தலித் மக்கள்/ ஆதிவாசி மக்கள் ஆகியோரில் பெரும்பான்மையானவர்களை ஓரணியில் திரட்டுவதில் வெற்றி பெற்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை மேல்சாதியினரான பிராமணர்கள்/ பட்டேல்கள்/ பனியாக்கள் திட்டமிட்டனர்; ஆனால் அதனை களத்தில் அமலாக்கியது பிற்படுத்தப்பட்ட/ தலித் / ஆதிவாசி மக்கள்தான் என கூறுகிறார் சமூக ஆய்வாளர் ராம் புனியானி. இதன் மூலம் மோடி தலைமையில் பா.ஜ.க. குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவது சாத்தியமானது. இந்த தொடர் வெற்றிகளை மோடியின் திறமை என பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டது! இதுவே மோடியை 2014ம் ஆண்டு தேர்தலில் பிரதமராக ஆக்கியது!

முஸ்லிம்கள் பொது எதிரி எனும் மயக்கத்தில் இருந்த குஜராத் உழைப்பாளி மக்கள் மோடியின் ஆட்சி உண்மையில் என்ன சாதித்தது என்பதை கவனிக்க தவறினர். குறிப்பாக சமூக குறியீடுகளில் குஜராத் சறுக்கி பின்னுக்கு போய்க் கொண்டிருந்ததை அவர்கள் உணரவில்லை. உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு கேரளா 1084 பெண் குழந்தைகளும் தமிழகம் 996 பெண் குழந்தைகளும் பெற்றிருந்த பொழுது குஜராத் 919 பெண் குழந்தைகள் மட்டுமே பெற்று பட்டியலில் கீழ் நிலையில் இருந்தது. கல்வாடா போன்ற பல கிராமங்களில் இந்த விகிதாச்சாரம் 702 என மோசமாக இருந்தது. இதே நிலைதான் கல்வியிலும் இருந்தது. எனவே மனிதவள மேம்பாடு குறியீடில் இந்திய மாநிலங்களில் குஜராத் 11வது எனும் மோசமான இடத்தை பிடித்தது.  இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ள மோடி- அமித்ஷா கூட்டணிக்கு நேரம் இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறத்தில் மதப்பிளவுகளையும் இன்னொரு புறத்தில் தமக்கு ஆதரவாக இருந்த கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு கொள்ளை அடிக்க வாய்ப்புகளையும் உருவாக்குவதில் கவனம் கொண்டிருந்தனர்.

ஆகவே குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு பம்பர் லாட்டரியாகவும் ஏழை மக்களுக்கு பெரும் இழப்புகளாகவும் அமைந்தன. இதில் பாதிக்கப்பட்ட முக்கிய சமூக குறியீடுகளில் ஒன்று மக்களின் சுகாதாரம் ஆகும். 

இன்றும் தொடரும் அவலநிலை!

2014ம் ஆண்டுக்கு பிறகும் இந்த நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனை கீழ்கண்ட கசப்பான உண்மைகள் தெளிவாக்கும்:

*    சமூகக் குறியீடுகளில் இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் உள்ளது.

*    குஜராத்தில் 1000 பேருக்கு 0.33 மருத்துவப் படுக்கைகள்தான் உள்ளன. அகில இந்திய சராசரி 0.55 ஆகும். குஜராத்துக்கு கீழே பட்டியலில் பீகார் மட்டும்தான் உள்ளது.

*    1999-2000 காலகட்டத்தில் சுகாதாரத் துறைக்கு செலவு செய்வதில் 4வது இடத்தில் இருந்த குஜராத் பின்னர் 11வது இடத்திற்கு சரிந்தது.

*    சிசு மரணவிகிதம் குஜராத்தில் தொடர்ந்து அதிக விகிதத்தில் உள்ளது.

*    ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகக் குறைவாக இருப்பது குஜராத்தில்தான்! பீகார் கூட குஜராத்தைவிட 3 மடங்கு அதிகமாக சுகாதார நிலையங்களை கிராமங்களில் கொண்டுள்ளது.

*    குஜராத்தில் பல அரசு மருத்துவமனைகள் தனியாரிடம் தரப்பட்டுவிட்டன.

*    கல்விக்கும் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குஜராத்தின் உழைப்பாளிகளில் 45% பேர் 3வது வரைக்கும்தான் கல்வி கற்றுள்ளனர்.

*    ஊரடங்கு அறிவித்த பிறகுதான் 156 சுவாசக் கருவிகளை குஜராத் கொள்முதல் செய்தது. இப்பொழுது சுவாசக்கருவிகள்/ முகக்கவசங்கள் ஆகியவை கொள்முதல் செய்ததில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

*   அகமதாபாத் நகரில் கோவிட் வைரசுக்காக பரவலாக பரிசோதனை செய்த ஆணையர் அதிக பரிசோதனை செய்ததற்காக திடீரென மாற்றப்பட்டார். 

இப்படி குஜராத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட சமூகநல முதலீடுகள், குறிப்பாக மருத்துவ மற்றும் சுகாதார செலவுகளுக்கு செய்த வெட்டு இன்று குஜராத்தை மிகப்பெரிய துன்பத்தில் தள்ளியுள்ளது. டிரம்ப் அகமதாபாத்துக்கு வந்த பொழுது குடிசைப் பகுதிகள் அசிங்கம் என கருதி அதை மறைக்க சுவர் எழுப்பினர். இன்று  வைரஸ் தொற்று குஜராத் முழுவதையுமே அம்பலப்படுத்திவிட்டது. இதனை மறைக்க எந்த சுவரால் முடியும்?

;