tamilnadu

img

முஷ்ரப் அலியும், மோனு அகர்வாலும் - ஜி.ராமகிருஷ்ணன்

தில்லியில் ஒரு தொழிற்கூடத்தில் நடந்த கோரமான தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 16 பேர் தீக்காயமுற்று உயிருக்குப் போராடுகின்றனர். இந்த விபத்து ஞாயிறு அதிகாலையில் ஏற்பட்டது. குறுகிய படிக்கட்டுக்கள், இரும்பு கம்பிகளைக் கொண்ட ஜன்னல்கள், தாழிடப்பட்ட மொட்டை மாடி என இருக்கும் இக்கட்டிடத்தில் கீழ்தளத்தி லும், முதல்தளத்திலும் இருந்தவர்கள் தப்பித்து விட்டனர். மூன்றாவது, நான்காவது தளத்தில் இருந்தவர்கள் தப்பிப்ப தற்கே வழியில்லாமல் தீயின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகிவிட்டனர்.  தொழிற்கூடத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்ட தா? தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பதற்கான ஏற்பாடு உள்ளதா? என்பதைப் பற்றியெல்லாம் விசாரணையில் தான் தெரிய வரும். 

துயரமிக்க இந்த விபத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்... தீ விபத்தில் இறந்த 43 வயதான முஷ்ரப் அலி, தான் தீக்கிரையாவது உறுதியாகிவிட்ட நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தன்னுடைய பால்ய சிநேகிதரான மோனு அகர்வாலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதறியபடி பேசியிருக்கிறார்.  “தப்பிப்பதற்கு வழியில்லை. எங்கும் தீ பரவிவிட்டது. தீயில் நான் இறப்பது நிச்சயம். நீங்கள் புறப்பட்டு தில்லி யில் கரோல்பாக் பகுதிக்கு வாருங்கள். என்னுடைய மனைவியையும், நான்கு குழந்தைகளையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று கதறுகிறார் முஷ்ரப் அலி.

“ஐயோ, உங்களால் தப்பிக்க முடியாதா? தீயணைப்பு படையை தொடர்பு கொள்ள முடியாதா? அவர்களை அழை யுங்கள், அவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள்” என பதற்றத்தோடு பதில் அளிக்கிறார் மோனு முஷ்ரப் அலி, “இங்கு ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார். 

“அச்சப்படாதீர்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகி விடாது” 
எனத் தேற்றுகிறார் மோனு 

“என்னால் மூச்சுக் கூட விட முடியவில்லை. தயவு செய்து என்னுடைய குழந்தைகளையும், மனைவியையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.” 

                             -கதறி அழுதபடியே தீயில் வெந்துபோனார் முஷ்ரப்.

தீ விபத்தில் சிக்கிய முஷ்ரப் அலி என்ற இஸ்லாமியத் தொழிலாளி தன்னுடைய உறவினர்களுக்கோ அல்லது தான் சார்ந்த சமூகத்தினருக்கோ தொடர்பு கொள்ளவில்லை. மாறாக, சிறுவயதிலிருந்து ஒன்றாக வாழ்ந்து பழகிய நீண்ட நாள் நண்பரான இந்து மதத்தைச் சார்ந்த அக்ரவாலைத் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

எங்கே போனது மதம்...! என்னே மனித நேயம்! 
 

இதே வேளையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட முன்வடிவை முன்மொழிந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். அந்த மசோதா என்ன சொல்கிறது?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு குடியேறிய இஸ்லாமியர்கள் தவிர்த்து இதர இந்துக்கள், கிறித்துவர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக் கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும்.  விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடக் கூடிய ஒரு இஸ்லா மியர் தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்க அவருடைய பால்ய சிநேகிதரான இந்து மதத்தைச் சார்ந்தவருடன் பேசுகிற அளவுக்கு மக்கள் மத்தியில் மதம் கடந்த மனித நேயம் நிலவுகிற போது, மத்தியில் ஆளும் மோடி அரசு மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்த தனது தொடர் முயற்சிக ளின் அடுத்தக் கட்டமாக மேற்கண்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. 
 

மக்கள் இந்த மதவாதிகளை மீண்டும் மீண்டும் தங்களது செயல்களால் தூக்கியெறிந்தாலும், மதவெறியர்கள், தங்களது ஆதிக்கத்தை  நிலைநாட்ட, மனிதத்தை, மனித நேயத்தை, மனிதத் தன்மையை ஒட்டுமொத்தமாக சிதைத்து, மனித நேயமற்ற சமூகமாக மாற்றிட முயற்சித்து வருகிறார்கள். சமூகத்தை மனிதத்தன்மையற்றதாக மாற்றுகிற பயங்கரக் கொடூரங்களின் அடையாளம்தான் உன்னாவ் சம்பவம்.

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சார்ந்த 23 வயதான ஒரு பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சார்ந்த சிவம் திரிவேதி என்பவர் ரேபரேலிக்கு கடத்திச் சென்று, பாலியல் வன்முறை செய்து அதையே படம் எடுத்திருக்கிறார். சுமார் 1 மாத காலம் ஒரு அறையில் அடைத்து பாலியல் கொடுமை செய்தி ருக்கிறார். கடந்த டிசம்பர் 2018ல், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் காவல்துறையினருக்கு புகார் அனுப்பி யிருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 8 நாட்கள் கழித்து மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளருக்கு புகார் கொடுத்தார். அந்த காவல்துறை அதி காரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட நீதிமன்றத்தில் நடவடிக்கை கோரி மனு செய்தார். 2019 மார்ச் மாதத்தில் தான் நீதிமன்றத்தினுடைய உத்தரவின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 

இரண்டு மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சமூக விரோதி சிவம், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையா னார். 10 நாட்களுக்குப் பிறகு புகாரை திரும்ப பெற வேண்டு மென்று அந்த பெண்ணை சிவம் உள்ளிட்டோர் தாக்கி, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கிறார்கள். சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் இறந்து விட்டார். 

உரிய நேரத்தில் காவல்துறையும், மாநில அரசும் நடவடிக்கை எடுத்திருந்தால் பெண் இறந்திருக்க மாட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்த சமூக விரோதிகள் சிறையிலிருந்திருப்பார்கள். இந்திய சமூகத்தின் அடையாளம் முஷ்ரப் அலியின்  மோனு அகர்வாலும்தான்; உன்னாவ் கொடியவர்களும், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் யோகி ஆதித்ய நாத்தும் அமித்ஷா போன்றவர்களும் அல்லர்!

;