tamilnadu

img

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா?

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக கூறிய ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன்: அதை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை” என்று நடிகர் கமலஹாசன் வழிமொழிந்துள்ளார். தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆளுமை மிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக  கூறியுள்ளார்கள். தமிழகத்தில் அடுத்தடுத்து இரு தலைவர்கள் மறைந்த நிலையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் இருந்தபோதும், ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருந்து கொண்டே உள்ளது என்று பாஜக செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

வெற்றிடம் எதுவும் இல்லை என்று ஆளுங்கட்சியான அதிமுக அவ்வப்போது கூறிவருகிறது. எதிர்க்கட்சியான திமுகவும் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று மறுத்துள்ளது. இருந்தாலும், ‘வெற்றிடம்’ குறித்த விவாதம் அவ்வப்போது முன்னுக்கு வருகிறது. இப்படி ஒரு கருத்தியலை பாஜக ஊக்குவித்து வருகிறது. எவ்வளவோ முயன்றபோதும், பாஜகவினால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை. ஆகவே தங்களுக்கு கிடைக்காத இடத்தை வெற்றிடம் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.  கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திரைத்துறையிலும் மிகப் பெரிய ஆளுமைகளாக இருந்தவர்கள் என்பது உண்மை. அவர்கள் தங்களுக்கு இருந்த செல்வாக்கினால் அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையை செலுத்தினார்கள். அந்தக் கட்சிகளில் அவர்களை மீறி தலைவர்கள் உருவாக வாய்ப்பு இல்லை.

எனினும், அரசியலில் இவர்களுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதை பூர்த்தி செய்ய இப்போது இருப்பவர்களால் முடியாது என்றும் எனவே, புதிதாக வருபவர்களால்தான் அந்த இடத்தை நிரப்ப முடியும் என்றும் ஒரு கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் குறைகள் தென்பட்டபோது, அதை சுட்டிக் காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்கியது இல்லை. அவர்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் இல்லாமலும் இல்லை.  போராட்டங்கள் மூலமாகவும் தலைவர்களுடனான நேரடி சந்திப்புகள் மூலமும் இப்பிரச்சனைகள் குறித்து தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.அரசியல் விஞ்ஞானத்தில் ‘வெற்றிடம்’ என்பது சூனியத்திலிருந்து துவங்குகிறது. ஆனால், தொடர்ந்து சூனியமாக இருக்க முடியாது. அடுத்தடுத்து, அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டே தீரும். அரசு நிர்வாக எந்திரம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். ஆட்சிகள் மாறினாலும் அந்த எந்திரம் சுழன்று கொண்டேதான் இருக்கும். தலைமைச் செயலாளர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை பல்வேறு படிநிலைகளில் செயல்படக் கூடிய அந்த எந்திரம் ஒருபோதும் நின்று விடுவதில்லை. ஆட்சிகள் மாறலாம். அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாறலாம். அது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் கலைஞர் மற்றும் எம்ஜிஆர் அரசுகள் மத்திய அரசினால் கலைக்கப்பட்ட காலங்களில் உடனடியாக ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டு, அரசு எந்திரம் சுழன்று கொண்டுதான் இருந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினாலும் அரசியல் விஞ்ஞானம் தருகிற செய்தி இதுதான். ஒரு வெற்றிடம் உருவாகுமானால் அது இயல்பாகவே நிரப்பப்பட்டு விடும். 

பிரிட்டனில் மன்னர் இறந்துவிட்டால், ‘மன்னர் இறந்துவிட்டார், மன்னர் நீடூழி வாழ்க’ என்றுதான் சொல்வார்களாம். ஏனென்றால், அந்த மன்னர் இறந்தாலும், இன்னொருவர் மூலம் மன்னராட்சி தொடரும் என்பதுதான். இடைவெளி ஏற்படாது. மன்னராட்சியில் மட்டுமல்ல, மக்களாட்சியிலும் வெற்றிடம் நிரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். கிரேக்கத்தில் அலெக்சாண்டர் மறைந்த போது, அவரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. ஆனால், அடுத்தடுத்து அரசுகள் உருவாகவே செய்தன. மத்தியக் கிழக்கு மற்றும் பிரான்சின் வரலாற்றை உற்றுக் கவனித்தாலும், இதைப் புரிந்து கொள்ள முடியும். 2003-ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை இராக்கை கைப்பற்றி, சதாம் உசேனை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் அழித்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த சதாம் உசேனின் பாத் கட்சியும் அழிக்கப்பட்டது. அன்று, ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில், அப்போது இடைக்காலமாக நிர்வாகத்தை கவனிக்க, பால்மர் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. 1999-ல் கொசாவோ, 2011-ல் லிபியா என ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு இடைக்கால ஏற்பாடாக அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டன. 

சர்வாதிகார நாடுகளிலும் கூட அடுத்தடுத்து வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும். ஜனநாயக அரசியலிலும் வெற்றிடம் என்பது இயல்பாகவே நிரப்பப்பட்டு விடும். தமிழகத்தைப் பொறுத்த வரை பாஜகவின் விரக்தியிலிருந்தே வெற்றிடம் என்கிற கோட்பாடு உருவாக்கப்பட்டு, பரப்பப்படுகிறது. பாஜகவின் தயவில் மாநில ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அவர்களால் இதை உறுதிபட மறுத்துப் பேச முடியவில்லை. பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் பாஜகவை எதிர்த்துப் பேசாவிட்டாலும் கூட வெற்றிடப் பிரச்சனையில் அவ்வப்போது முணுமுணுப்பு காட்டுகின்றனர். திமுகவைப் பொறுத்த வரை, கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கழகம் இல்லாத தமிழ்நாடு என்று பாஜக கூறியது. கலகம் செய்யும் இவர்களை ஏற்க, தமிழகம் தயாராக இல்லாத நிலையில், வெற்றிடம் என்று கூறி அதை வெளிக்காற்றை கொண்டு நிரப்ப முயல்கிறார்கள். இது விஞ்ஞானத்துக்கு மட்டுமல்ல, அரசியல் விஞ்ஞானத்துக்கும் எதிரானது. 
தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஏராளம். அதுகுறித்தெல்லாம், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவே வெற்றிடம் என்ற கருத்தியல் அவ்வப்போது, கிளப்பி விடப்பட்டு அதுவே மையப் பிரச்சனையாகவும் மாற்றப்படுகிறது. இடையறாத மக்கள் போராட்டங்களின் மூலமாகவே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அத்தகைய போராட்டங்கள், ஒரு சிறு வெற்றிடத்தைக் கூட விட்டு வைக்காது.

டி.கே.ரங்கராஜன், எம்.பி.,மத்தியக்குழு உறுப்பினர், 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
;