tamilnadu

img

மாஸ்கோவிலிருந்து இந்தியா புறப்பட அவரின் லட்சிய உறுதியே காரணம் - ஜோ.ராஜ்மோகன்

....நேற்றைய தொடர்ச்சி

1929ல் வி.எச். ஜோஷி என்பவரை மாஸ்கோவுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தபோது அமீர் ஹைதர்கான் தங்கியிருந்த இல்லம் சோதனையிடப்பட்டது. மீரட் சதி வழக்கில் இவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனவே பம்பாயிலிருந்து தலைமறைவாகி சென்னை வந்து கப்பலேறி மார்செல்ஸ், பெர்லின் வழியாக மாஸ்கோ அடைந்தார். மாஸ்கோவில் கம்யூனிச அகிலத்தின் பிரதிநிதி அவரை ரயில்நிலையத்தில் வரவேற்றார். மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டிலுள்ள ஒரு அறையில் கான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிவப்பு தொழிற்சங்க காங்கிரஸ் (Red International Labour Union) மாஸ்கோவில் நடைபெறவிருந்து, அதில் கிழக்குப் பிரிவு பொறுப்பு ஹைதர்கானுக்கு அளிக்கப்பட்டது. அதன் தயாரிப்பு பணிகள் பற்றிய கூட்டங்களில் கான் பங்கு கொண்டார். அப்போது தோழர் பாலாபுஷேவிச் என்பவருடன் அறிமுகமானார். 1930ல் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16ஆவது காங்கிரசுக்கு கட்சித் தோழர்களின் ஆணைப்படி அழைத்துச் செல்லப்பட்டார். மாநாட்டு ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். 

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த லுசாவ்ஸ்கியுடனும் அமெரிக்க பிரதிநிதி கஸ்ஹால் ஆகியோருடனும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது குறித்து விவாதித்தார். அம்மாநாட்டில் மிஸ்ரா என்ற பெயரில் இந்திய தொழிற்சங்க காங்கிரசின் சார்பாக தலைமை குழுவிற்குத் தோழர் ஹைதர்கான் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டின் போது சோவியத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதி தோழர் ஷ்வெர்னிக். இவர் பின்னர் சோவியத் குடியரசின் தலைவர் ஆனார்.  சீன பிரதிநிதி லியு - ஷோ - சி. இவர் பின்னர் மக்கள் சீன குடியரசின் தலைவரானார். மற்றும் ஏங்கெல்சின் சமகாலத்தவரான தோழர் டாம்மான் ஆகியோரையும் சந்தித்து கான் விவாதித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அகிலம் மற்றும் சிவப்பு சர்வதேசியம் (பிரோபின்டர்னின்) கூட்டங்களில் ஒருமுறை கடும் விவாதம் மேலெழுந்தது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கு இவ்விரு அமைப்புகளும் காட்டி வந்த மெத்தனப்போக்கை அமீர் ஹைதர்கான் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குவது குறித்து நீங்கள் அக்கறை காட்டவில்லை என்று கான் கூறினார். இதற்கு பதிலளித்து பேசுகையில் லுசாவ்ஸ்கி கடுமையாக அமீர் ஹைதர்கானை திருப்பி தாக்கினார். புரட்சி இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும், மாஸ்கோவிலன்று. கம்யூனிஸ்ட் அகிலம் இந்திய இயக்கத்துக்கு எந்த வழியில் உதவ முடியும் என்று கேட்டு சலிப்படைந்துவிட்டார்கள் என்று லுசாவ்ஸ்கி கூறினார்.

அதற்கும் பதிலளித்த ஹைதர்கான் வேறுவழிகள் இல்லை. இந்திய கட்சி ஊழியர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தந்தாக வேண்டும் என்று ஹைதர்கான் தனது அழுத்தமான கோரிக்கையை முன்வைத்தார். அதனால்தான் கான் கம்யூனிஸ்ட் அகிலத்திடம் முன்வைத்த எல்லா நியாயமான திட்டங்களுக்கும் உடனே ஒப்புதல் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லுசாவ்ஸ்கியை சந்தித்து அமீர் ஹைதர்கான் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு, கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி ஸ்தாபனம் என்பதொன்றில்லாமல் உங்களால் எதையும் சாதிக்க முடியாது. எனவே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்குங்கள் என்று லுசாவ்ஸ்கி கூறினார். நல்ல வசதிகளையும் தோழமை உணர்ச்சி ததும்பும் சுற்றுச்சார்பையும் துறந்து மாஸ்கோவை விட்டு வெளியேறத் துணிந்ததற்கு எனது லட்சிய உறுதியே காரணம் என்று அமீர் ஹைதர்கான் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளி வர்க்கம் பற்றிய அறிவிருந்தும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 1918ஆம் ஆண்டு நடைபெற்ற வீரம்செறிந்த போராட்டங்கள் பலமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத காரணத்தால் தோல்வி கண்டன. ஜாரின் ரஷ்யாவில் மகத்தான சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்றதெனில் அதற்கு லெனினது போல்ஷ்விக் கட்சியே காரணம் என்பதை அமீர் ஹைதர்கான் நன்கு உணர்ந்திருந்தார். லுசாவ்ஸ்கியின் சொற்கள் கானை உறங்கவிடவில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அல்லது கட்சி குழுவை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்ற லட்சிய உறுதியோடுதான் இந்தியா புறப்பட்டார்.

கொஞ்சம் எழுதப்படிக்கத் தெரிந்த இளைஞர்களையும் தொழிலாளர்களையும் உழவர் குடிமக்களையும் தேடித் தருமாறு பி.டி.ரணதிவே மூலம் ஹைதர்கான் கேட்டுக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தை உருவாக்க ஹைதர்கான் இந்தியா வந்ததற்குப் பின்னால் ஏராளமான இளைஞர்களை மாஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். தென்னிந்திய மொழிகள் தனக்கு தெரியாதென்றாலும், பெரும் நம்பிக்கையோடு தென்னிந்தியாவில் வந்து கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு அரும்பாடு பட்டார். அதற்காக பல்வேறு அடக்குமுறைகளையும் சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தார். 1932 மே 8ஆம் நாள் சென்னையில் கைது செய்யப்பட்டார். 6 மாத காலம் தண்டனை பெற்றார். அப்போது அரசியல் கைதிகளை சரியாக நடத்தாததைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அப்போதுதான் அதே சிறையில் இருந்த சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். சேலம், கோயமுத்தூர், ராஜமகேந்திரபுரம் முசாபர்பூர், நாசிக் சிறைச் சாலைகளில் தண்டனையை சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்.  இந்தியா- பாகிஸ்தான் பிளவை அவர் விரும்பவில்லை. கடுமையாக எதிர்த்தார். 1945ல் ராவல்பிண்டிக்கு சென்றார். பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முயற்சித்தார் என்றும் பல்வேறு சதிகளில் ஈடுபட்டார் எனவும் பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்றம் சுமத்தியது.  1948 முதல் 1961 வரை மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமையை அனுபவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்காக தியாகம் செய்வதையே தனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர் அமீர் ஹைதர்கான். இந்திய துணைக் கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ச்சியடைந்ததற்கு மிக முக்கிய பங்களிப்பு செய்தவராக அமீர் ஹைதர்கான் திகழ்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன், தலைவன், எப்படி திகழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு கால பயணத்தில் தனித்து நிற்கிறார் தோழர் அமீர் ஹைதர்கான்.

;