1844 - மேற்கத்திய அரசியல் சிந்தனைக் களத்தின் மாபெரும் நட்பு என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் நட்பு தொடங்கக் காரணமான, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோரின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. ஏற்கெனவே 1842இல் ஏங்கல்ஸ் ஒருமுறை மார்க்சைச் சந்தித்திருந்தாலும் அப்போது, மார்க்சை ஏங்கல்ஸ் கவரவில்லை! துணி ஆலைகளை நடத்திக் கொண்டிருந்த செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஏங்கல்ஸ். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் குடும்பத்தின் துணி ஆலையை நிர்வகிக்க அனுப்பப்பட்ட இளம் ஏங்கல்ஸ், ஆலைகளால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும், அவர்களின் மிகமோசமான வாழ்க்கை நிலையையும் நேரடியாகக் கண்டார். ரீனிய செய்தித்தாள் என்ற பெயரில் மார்க்ஸ் நடத்திய இதழில் வெளியான, ஆலைத் தொழிலாளர்களின் பணிநிலை, மோசமான வாழ்க்கை ஆகியவற்றை வெளிப்படுத்திய மார்க்சின் கட்டுரைகளை, மார்க்சைச் சந்திப்பதற்குமுன்பே ஏங்கல்ஸ் வெளியிட்டிருந்தாலும், ஏங்கல்சின் செல்வந்த தோற்றத்தை மார்க்சால் ஏற்க முடியவில்லை. ஏங்கல்ஸ் எழுதியிருந்த ‘இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ என்ற, அப்போது வெளிவந்திராத (பின்னர் 1845இல் வெளியான) நூலே, மார்க்சுக்கு எங்கெல்சைப் பிடிக்கச் செய்தது. தொழிலாளர்களைச் சுரண்டுவதில் தானும் ஈடுபட விரும்பாமல், தொழிற்சாலையைவிட்டு வெளியேறி, மீண்டும் ஜெர்மனிக்குச் செல்லும் வழியில்தான், பாரீசில் மார்க்சை இரண்டாம்முறை சந்தித்தார் ஏங்கல்ஸ். முரண்பாடு களுக்கிடையிலேயே இருவரது நட்பும் வளர்ந்தாலும், தான் கண்ட உழைக்கும் மக்களின் வேதனைக்கான தீர்வை மார்க்ஸ்தான் விளக்க முடியும் என்பதை ஏங்கல்ஸ் உணர்ந்து கொண்டார்.
மார்க்சுக்குப் பொருளாதார ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொண்ட ஏங்கல்ஸ், 1849இல் மீண்டும் குடும்பத் தொழிலைச் செய்வதாக ஏற்றுக்கொண்டு, இங்கிலாந்துக்கு வந்து ஆலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். வீட்டிற்குத் தெரியாமல் மார்க்சுக்கு நிதியுதவி அளித்ததுடன், தொழிலாளர்களின் நிலை, கூலி வழங்கப்படும் முறை, மூலதனத்தின் ஏற்றத்தாழ்வுகள், பங்குச் சந்தையின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரடியாக அறிந்து, மார்க்சுக்குத் தெரிவித்தார் ஏங்கல்ஸ். உலகத் தொழிலாளர்களின் நன்மைக்காக, தங்கள் ஆலைத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை ஏங்கல்ஸ் மனவேதனையோடு ஏற்றதாக, ‘மார்க்சின் தளபதி’ என்ற நூல் குறிப்பிடுகிறது. மார்க்சின் மறைவுக்குப்பின், அவரது குறிப்புகளைத் தொகுத்தது மட்டுமின்றி, மார்க்சின் அனைத்துப் படைப்புகளிலும் ஏங்கல்சின் பங்கிருந்தது. அதனால், இருவரின் பெயரிலும் குறிப்பிடப்படவேண்டும் என்ற வேண்டு கோள்களுக்கு, ஏங்கல்சின் பங்களிப்பையும் மார்க்ஸ் செய்திருக்க முடியும் என்றும், அதனால் மார்க்சியம் என்பதே சரியென்றும் ‘லுத்விக் ஃபாயர்பாக்கும், மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின முடிவும்’ நூலில் குறிப்பிட்டிரு க்கிறார் ஏங்கல்ஸ். உண்மையில், அனைத்துத் தளங்களிலும் மார்க்சுக்கு உதவிய ஏங்கல்ஸ் கிடைக்காமற்போயிருந்தால், உலகிற்கு ‘மூலதனம்’ கிடைக்காமற்போயிருக்கக்கூடும்!