“சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே இளையராஜா நினைப்பில் ஒருமுறை சைதை ஜோன்ஸ் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். “விர்ர்ர்க்` என `…சட்டக்” ஸ்டைலாக ஒரு பைக் பிரேக் போட்டு நின்றது. “ஏய்யா சாவு கிராக்கி…ஊட்ல சொல்ட்டு வந்துட்டியா” என்ற பின்னணி இசையுடன் ஒருவன் முறைத்தான். சகலமும் கலங்கிவிட்டது. இத்தனைக்கும் நான் ஒரு ஓரமாகத்தான் போய்க் கொண்டிருந்தேன். இதெல்லாம் நம் சென்னைப் போக்குவரத்தின் சீதனங்கள். எங்கிருந்து ஒரு வாகனம் வரும் என்பதை எந்தத் துப்பறியும் நிபுணனாலும் கண்டுபிடிக்க முடியாது.
சென்னையில் பேருந்துகள் படிக்கட்டுகள் வழிய வழிய ஒலிம்பிக்கில் ஓடுகின்ற கர்ப்பிணிப் பெண்கள் போல போய்க்கொண்டிருக்கும். நிறுத்தாமலே போகும் பேருந்துகளும் உண்டு. நின்றாலும் பேருந்தில் ஏற முடியாமல் ஏமாந்து போகிற பயணிகளும் உண்டு. கனடாவில் கதையே வேறு. அது வேற லெவல். முதலில் சாலைகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். சொர்க்கத்திலிருந்து வழுக்கி விழுந்த வழ வழத் துண்டுகள் சாலைகளாகியிருக்க வேண்டும். நீளமான கூந்தலில் பேன்கள் சருக்கு விளையாட்டு விளையாடுவதைப்போல வாகனங்கள் வழுக்கிக் கொண்டு செல்கின்றன. சாலைகள் அழகாக இருக்கின்றன என்று ஆசைப்பட்டு இஷ்டம் போல் யாரும் தேவைப்பட்ட போதெல்லாம் சாலைகளில் இறங்கி தங்கள் பாதங்களால் பரிசோதிப்பதில்லை. யார் கவனிக்கப் போகிறார்கள் என்று சாலையில் இறங்கி குறுக்கே நடப்பதில்லை.
‘நடைபாதை நடப்பதற்கே’ என்று எங்கேயும் விளம்பரப் பலகைகள் தொங்காத போதும் நடைபாதையை நடப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். நடைபாதையில் எந்தக் கவுன்சிலரின் ஆட்களும் கடை நடத்திக்கொண்டிருக்கவில்லை. காவலர்களே ஆட்டோக்களை வாடகைக்கு ஓடவிட்டு போக்குவரத்து விதிகளை மீறச் சொல்வதில்லை. அங்கு ஆட்டோக்களே இல்லை. எல்லாம் மகிழுந்துகள்தான். உண்மையிலேயே மகிழுந்து என்கிற நமது தமிழ்த் திருப்பெயர் அங்குதான் காரணப் பெயராக இருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் ஒரு நாளைக்கு பத்தோ பதினைந்தோ பார்க்கலாம். ரொம்பவும் குறைச்சல். பெரும்பாலும் விளையாட்டு சாகசக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து எண்கள் அழகழகாகப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்மேல் எந்த அரசியல்வாதியின் ஆளுயரப் போஸ்டர்களும் ஒட்டியிருக்கவில்லை. நம் நாட்டில் இப்படியான கவுரவமான போக்குவரத்துக் காட்சிகளை என்று காணப் போகிறோம் என்று மனம் தவிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அப்படி நாம் தவிப்பவர்கள் அல்ல என்பதும் வேறு விஷயம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் எண்கள் குறிக்கப்பட்டு சரியான நேரத்தில் நேர்த்தியான பேருந்துகள் வந்து நிற்கின்றன. பயணியர் குடைகளில் இருப்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். பேருந்தில் இருப்பவர்கள் இறங்குவதற்கு முன்பே யாரும் முண்டியடித்து ஏறுவதில்லை. நிறுத்தத்தில் வரிசையில் நின்றிருக்கும் பயணிகள் ஒருவர்பின் ஒருவராக ஏறி ஓட்டுநருக்கு ஹாய் சொல்லியபடி பயண அட்டை தேய்த்து உள்ளே போகிறார்கள். பேருந்து நிற்கிறபோதும் ஓட்டுநருக்கு நன்றி சொல்லி இறங்குகிறார்கள். ஓட்டுநரும் சிரித்த முகத்துடன் ஹாய் நன்றிகளைப் பரஸ்பரம் புன்சிரிப்புடன் பரிமாறிக் கொள்கிறார்.
சாலையைக் கடப்பவர்கள் மின்கம்பத்தில் இருக்கும் பொத்தானை அழுத்திவிட்டு நிற்க சிக்னல் கிடைக்கிறது. சாலையைக் கடக்கிறார்கள். பிறகு வரிசையாக வாகனங்கள் வேகமெடுக்கின்றன. வரிக்குதிரை கடப்புகள் ( ஜீப்ரா கிராசிங்) இருந்தால் பயணிகள் தாராளமாகச் சாலைகளைக் கடந்து செல்லலாம். பார்த்து நிறுத்திப் பயணிக்க வேண்டியது வாகன ஓட்டிகளின் கடமை. அந்த நாட்டில் ஓட்டுநர்களின் இருக்கை வாகனத்தின் இடதுபுறத்தில் இருக்கிறது. பேருந்துகள் மிக நல்ல நிலையில் இருக்கின்றன.
உள்ளே முதியோர்களுக்காக உத்தரவாதப் படுத்தப்பட்டத் தனி இருக்கைகள். உடல் ஊனமுற்றவர்களும் அவர்களின் வண்டியிலேயே பேருந்துக்குள் ஏற முடியும். இறங்கி ஏறுவதற்கு ஏற்றவாறு பேருந்தே ஒரு பக்கமாக சாய்ந்து படிக்கட்டினைத் தாழ்த்துகிறது. பயணி ஏறியபிறகு உயர்கிறது. சக்கர வண்டியில் சிறிய குழந்தையுடன் பேருந்தில் சுலபமாக பயணிக்க முடியும். பேருந்திலிருந்து சாலைக்கு எந்த சிரமமும் இல்லாமல் மீண்டும் சக்கர வண்டியை நகர்த்திவர முடியும். சாலைகளும் அதற்கேற்ற முறையிலேயே வடிவமைக்கப் பட்டிருந்தன. கனடாவில் ஓட்டுநர்கள் இல்லாமலேயே மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன என்கிற விஷயம் எனக்கு புதிய விஷயமாக இருந்தது. …
.. பயணிப்போம்