tamilnadu

img

இந்நாள் ஜுன் 28 இதற்கு முன்னால்

1870 - அமெரிக்கக் கூட்டரசின் விடுமுறை நாட்களுக்கான விதி, (விடுதலையடைந்து 94 ஆண்டுகளுக்குப்பின்!) அமெரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. விடுமுறை நாட்களும் மாநில அரசுகளாலேயே முடிவுசெய்யப்படும் அமெரிக்காவில், அப்போதும்கூட, மாநில அரசுகள் அளிக்கிற விடுமுறைகளை, தலைநகரமான கொலம்பியா மாவட்டத்திலுள்ள (வாஷிங்டன்), கூட்டரசின் ஊழியர்களுக்கு வழங்குவதே அந்த உத்தரவின் நோக்கமாக இருந்தது. பின்னர் அது, மற்ற இடங்களிலுள்ள கூட்டரசின் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டாலும், கூட்டரசின் விதி, கூட்டரசின் அலுவலகங்களுக்குத்தான் பொருந்தும் என்பதுடன், இன்றுவரை, கூட்டரசின் விடுமுறை நாட்களை, அதே தேதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு இல்லை. அதனால், மாநில அரசுகள் மாறுபட்ட விடுமுறை நாட்களைக் கொண்டிருப்பதுடன், தங்கள் பகுதிக்குரிய விடுமுறை நாட்களையும் கொண்டிருக்கின்றன. கூட்டரசின் விடுமுறை நாட்களும் 1968இல் இயற்றப்பட்ட சீரான திங்கட்கிழமை விடுமுறைச்சட்டத்தின்மூலம், வாரவிடுமுறையுடன் இணைக்கப்பட்டது இத்தொடரில் 2018 ஜூன் 28இல் இடம்பெற்றுள்ளது. தற்போது, அமெரிக்கக் கூட்டரசின் விடுமுறை நாட்களாக 10 நாட்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை எல்லா மாநிலங்களும் கடைப்பிடிக்கின்றன. ஆண்டுக்கு 36 நாட்கள் பொது விடுமுறைகொண்டுள்ள நேபாளமே உலகில் மிக அதிக விடுமுறைகொண்ட நாடாகவுள்ளது. விடுமுறை என்பதன் வரலாறு மதம் சார்ந்ததாகவே உள்ளது. மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதே விடுமுறையின் தொடக்கமாக இருந்திருக்கிறது. ‘ஹோலி’, ‘டே’ ஆகியவை இணைந்த புனிதநாள் என்பதே பின்னாளில் விடுமுறை என்ற பொருளுடைய சொல்லாகியது. உழைப்பாளர் நாள், ஒவ்வொரு நாட்டின் விடுதலை நாள் உள்ளிட்ட மதம்சாராத விடுமுறை நாட்களும் ஹாலிடே என்றே அழைக்கப்பட்டாலும், இன்றும் மதம்சார்ந்த விடுமுறை நாட்களே உலகெங்கும் பெரும்பான்மையாகவுள்ளன. இங்கிலாந்திலும், அதன் ஆளுகையின்கீழிருந்த நாடுகளிலும், எல்லா விடுமுறை நாட்களுமே ஹாலிடே என்றே அழைக்கப்பட்டாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொது விடுமுறைகள் மட்டுமே ஹாலிடே என்றும், மற்றவை வெக்கேஷன் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தி பிறந்த நாள் ஆகியவை கட்டாய விடுமுறை நாட்களாக உள்ளன.