1820 - அமெரிக்க அரசியலில் ‘மிசவுரி சமரசம்’ என்று குறிப்பிடப்படும் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, அடிமைமுறை தடைசெய்யப்பட்ட மாநிலமாக மேய்ன், அடிமை முறை தடைசெய்யப்படாத மாநிலமாக மிசவுரி ஆகியவை ஒரே நேரத்தில், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. அதாவது, அமெரிக்காவின் வடபகுதியிலுள்ள மாநிலங்களில் அடிமைமுறை தடைசெய்யப்பட்டாலும், மிசவுரிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக, மாநிலமாக்கும் கோரிக்கையை 1819இல் மிசவுரி எழுப்பியபோது உருவாக்கப்பட்ட வரைவுச் சட்டத்தில், அங்கு அடிமைமுறைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே, அடிமைமுறை என்பது மாநிலங்களின் பிரச்சனை என்றும், அதை அந்தந்த மாநிலத்தின் அரசமைப்புச் சட்டங்களே முடிவுசெய்யவேண்டும் என்றும், அடிமைமுறைக்கு ஆதரவான தென்பகுதி மாநிலங்கள் போராடிவந்தன. மிசவுரி மாநிலமாக்கக் கோரிய காலத்தில், அடிமைமுறைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமமாக 11-11 மாநிலங்களே இருந்தன என்பது செனட், பிரதிநிதிகள் அவை ஆகியவற்றில் சமநிலையை உருவாக்கி யிருந்தது. மிசவுரி அனுமதிக்கப்பட்டால், அது அடிமைமுறை ஆதரவு மாநிலங்களைப் பெரும்பான்மையாக்கிவிடும் என்ற சிக்கல் நிலவிய நிலையில்தான், மாநில மாக்க வேண்டுமென்று, அடிமைமுறைக்கு எதிரான மேய்ன் கோர, அதைப் பயன் படுத்திக்கொண்டு, சமநிலை தொடரும்வகையில் இவ்வாறு சட்டமியற்றப்பட்டது.
விவசாயத்தைக் கடந்து, தொழில்வளர்ச்சியை அடையத்தொடங்கியிருந்த (நிலவுடை மையிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறியிருந்த என்று படித்தால் சரியாக இருக்கும்!) பகுதிகளில், அடிமைமுறை நாகரிக சமூகம் ஏற்க முடியாதது என்ற கருத்து உருவாகியிருந்ததும், விவசாயத்தை மட்டுமே முதன்மையாகச் சார்ந்திருந்த (நிலவு டைமை தொடர்ந்த!) பகுதிகளில், அது தவிர்க்க இயலாததாகவும் கருதப்பட்டதே முரண்பாட்டுக்குக் காரணம். மாநிலங்களிடையே நிலவிய இந்த மாறுபட்ட நிலையை, (மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று கண்மூடித்தனமாகத் திணிக்காமல்!) கூட்டரசு அங்கீகரித்ததே அமெரிக்காவின் வளர்ச்சிக்கான காரணங்க ளுள் முக்கியமானது. 1854இல் இந்த மிசவுரி சமரசத்தை முடிவுக்குக் கொண்டுவந்த, கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம், குறிப்பிட்ட பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அடிமைமுறை தொடர்வது குறித்து முடிவெடுக்கச் சொன்னாலும், யாருக்கு வாக்குரி மை என்பது கடுமையான பிரச்சனைகளை உருவாக்கி, இறுதியில், அமெரிக்க உள்நாட்டுப் போராக மாறியது. இந்தக் கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டமும்கூட, நாடு முழு வதும் ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டபோது, அடிமைமுறை குறுக்கீடாக அமைந்ததால் தான் வந்தது என்பதுடன், அடிமைமுறையை முழுமையாக ஒழித்ததில் தொழில் வளர்ச்சியே முக்கியப் பின்னணியாக இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
- அறிவுக்கடல்