tamilnadu

img

மத்திய பட்ஜெட்டும் இந்திய எரிசக்தி துறையும் - எஸ்.எஸ்.சுப்பிரமணியன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த நிதி நிலை அறிக்கையில் இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் எரிசக்தி துறை தொடர்பாகவும் பல அறிவிப்புகளை அள்ளி வீசி சமூகப் பொருளாக உள்ள எரிசக்தியை சந்தைப் பொருளாக மாற்ற உச்சகட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தி யாவை மின் மயமாக்க 22,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டு புதுப்பிக்கத் தக்க மின்சார உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் மின் விநியோக நிறுவனங்களின் நிதி மேம்பாட்டை உத்தரவாதப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் தனது உரையில் இந்திய குடும்பங்க ளுக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இன்னும் 1 கோடி குடும்பங்கள் மின்சாரத்தை கண்டறியவில்லை என்பது தான். மேலும் தனது உரையில் மின் விநியோக கம்பெனிகள், நிதி இழப்பீடு, பற்றாக்குறையை சந்திக்கும் நிறுவனங்களாக உள்ளன என்று முதலைக் கண்ணீர் வடித்து அவர்களுக்கு உதவும் வகையில் இப்போதுள்ள மின் அளவிகளை மாற்றி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த வேண்டும் என்றும் மின் கட்ட ணம் செலுத்துவதில் பிரி பெய்டு (முன் கட்டணம்) முறையை அமல்படுத்துவதோடு மின் நுகர்வோர்கள் அவர்கள் விரும்பும் கம்பெனிகளிடம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக தனியாரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பானது அரசுத்துறையாக இயங்கி வரும் மின் நிறுவனங்களை சீரழிக்கவே செய்யும். மின்சாரம் எங்கு குறைவான விலையில் கிடைக்கின்றதோ அங்கு மின்சாரத்தை மின் நுகர்வோர்கள் பெற்றுக் கொள்வது மின் நுகர்வோர்களுக்கு லாபம் என்ற வாதத்தை முன் வைத்தாலும், தனியார் நிறுவனங்கள் முதலில் மின் நுகர்வோர்களை தன் பக்கம் கவர குறைவான கட்டணத்தில் அளிக்கலாம். ஆனால் மின் கட்டணம் நிர்ணயிப்பு என்பது தனியாரிடம் சென்று விட்ட பின்னர் லாப நோக்கோடு தான் மின் கட்டண நிர்ணயிப்பு இருக்கும், அந்த நிலை ஏற்படும் போது விவசாயிகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு மின்சாரம் எட்டா கனியாக மாறுவதும், மின் விநியோக நிறுவ னங்களின் கொள்ளை லாபத்திற்கே வழி வகுக்கும்.

அமைச்சர் தனது உரையில் மின் விநியோகம், தொடர மைப்பு, கட்டமைப்பில் மறுசீரமைப்பை வேகப்படுத்த வேண்டும் என்றும், தேசிய எரிவாயு தொடரமைப்பு 16200 கிலோ மீட்டரில் இருந்து 27, 000 கிலோ மீட்டராக விரிவுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பானது அரசு பசுமை மின்சாரத்தை நோக்கி செல்கிறது என்பதை உணர வேண்டி உள்ளது. மேலும் இரயில்வேக்கு சொந்தமான இடங்களிலும், விவசாய நிலங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்க ளை ஏற்பாடு செய்வதன் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டத்தை நிறைவேற்ற திட்ட மிட்டுள்ளது தெளிவாக தெரிகின்றது. மின்துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக வருமான வரி விதிப்பில் 15சதவீதம் சலுகையும் கார்ப்பரேட் வரி விதிப்பில் 15 சதவீதம் வரிச் சலுகையாகவும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்து உள்ளார். இந்தச் சலுகை அறிவிப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் மின்சாரத் துறையில் முதலீடு செய்து கொள்ளை அடிக்க வழிவகை செய்யும் நிதி நிலை அறிக்கையாக உள்ளது.

அமைச்சர் தனது அறிவிப்பில் சுற்றுப்புறச் சூழல் பாது காப்பு, பசுமை மின்சாரம் உற்பத்தி ஊக்குவிப்பு, மரபுசாரா மின் உற்பத்தி என்ற பெயரால் கார்பன் அதிகமாக வெளியிடும் அனல் மின் நிலையங்களை மூடிவிட வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அனல் மின் நிலையங்களை மூடு என்று அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்ட நிதி அமைச்சகம் அதை ஈடு செய்வதற்கான மின் உற்பத்தி ஏற்பாடுகள் எதையும் அறி விக்காதது, இன்று மிகை மின் மாநிலமாக உள்ள இந்திய திருநாட்டை மின் பற்றாக்குறை நாடாக மாற்றி தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின் பற்றாக்குறையை பயன்படுத்தி மின் கட்டணத்தை அவர்கள் நினைக்கின்ற அளவுக்கு நிர்ண யம் செய்து கொள்ளை லாபம் அடிக்கவும் அதன் மூலம் பல  ஆயிரம் கோடி ரூபாயை முறையற்ற முறையில் பெறுவ தற்கும், வழிவகை செய்துள்ளது. அமைச்சர் தனது அறிவிப்பில் அனல் மின் நிலையங்களை மூடி அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சூரிய ஒளி, காற்றலை மூலம் ஈடு செய்யலாம் என்பது ஏற்புடைய வாதம் அல்ல. 

ஏன் எனில் இன்றைய இந்திய மொத்த மின் உற்பத்தி திறன் 3,57,875 மெகாவாட்டாகும். இதில் அனல் மூலம் 2,26,324 மெகாவாட்டாகும். சதவீத அடிப்படையில் 63.2 சத வீதமாகும். மரபுச்சாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி என்பது 79,732 மெகாவாட். இது மொத்த மின் உற்பத்தியில் 22 சத வீதமாகும்.இனி வரும் காலங்களில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் 22 சதவீதம் 63 சதவீதமாக மாற உடனடி வாய்ப்பு இல்லை. அது மட்டுமல்லா மல் சூரிய ஒளி, காற்றாலை போன்ற மின் உற்பத்தி ஆதாரங்கள் பருவகால ஆதாரங்களே தவிர ஆண்டு முழுவதும் மின்சார உற்பத்திக்கு ஆதாரமாக இருக்க வாய்ப்பு இல்லை.

இவைகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் 50 கோடி மின் நுகர்வோர்களின் நலனை கணக்கில் கொள்ளா மல், மின் துறையில் தனியார் ஆதிக்கத்தை வளர்ப்பது, அவர்களின் கொள்ளை லாபத்திற்கு பட்டுக் கம்பளம் விரிப்பது என்பதை தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது நிதி நிலை அறிக்கையின் மூலம் அரங்கேற்றி உள்ளது. இந்திய மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் அனல் மின் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்க ணக்கான பொறியாளர்கள், தொழிலாளர்கள், அதிகாரிக ளின் வேலை பறிக்கப்பட்டு வீதியில் தள்ளும் அவலத்தை எல்லாம் கணக்கில் கொள்ளாத அரசாக உள்ளது. இந்த அரசின் காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் எண்ணிக்கையைவிட வேலையை பறித்து வீதியில் தள்வோ ரின் எண்ணிக்கையே அதிகமாகும்.

மத்திய அரசின் கொள்கையால் நிதி நிலை அறிக்கை யில் பாதிக்கப்பட்ட வங்கி, இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல் தொழி லாளர்கள் போராட்டக் களம் காணுவதைப் போல மின்சார தொழி லாளர்களும், ஓய்வூதியர்களும், மின் நுகர்வோர்களும் இணைந்து போராட்டக் களம் காண வேண்டிய நேரமிது.

கட்டுரையாளர் : முன்னாள் தலைவர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

;