tamilnadu

img

68 மாணவியரின் ஆடையை களைந்து மாதவிடாய் சோதனை... குஜராத் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அராஜகம்

அகமதாபாத்:
மாதவிடாய்க்கு உள்ளானவர்கள் கோயிலில் வழிபட்டார்களா? என்பதை அறிய, மாணவிகளின் ஆடைகளைக் கழற்றி பரிசோதித்த அராஜகம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநிலம், பூஜ் பகுதியில், இருப்பது, ஸ்ரீசகஜானந்த் மகளிர் கல்லூரி ஆகும். சுவாமி நாராயண் த்விசதாபி மருத்துவ மற்றும் தொண்டு அறக்கட்டளைக்குச் சொந்தமான இந்தக் கல்லூரியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான தங்கும் விடுதியும் இங்கு இயங்கி வருகிறது.

இந்த கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள், தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது; சக மாணவிகளையும் கூட தொட்டுப் பேசக்கூடாது; ஒட்டி உட்காரக் கூடாது என்று விதி வகுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அவர்கள் கறாராகவும் அமல்படுத்தி வந்துள்ளனர்.அண்மையில், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயிருக்கும் கோவிலில் சில மாணவிகள் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சில மாணவிகள் அவர்களைத் தொட்டுப் பேசியுள்ளனர். இதனை விடுதி வார்டன் கல்லூரி முதல்வரிடம் கூறியுள்ளார். கொதிப்படைந்த முதல்வர் எம்.ரணிங்கா, யார், யாருக்கெல்லாம் மாதவிடாய் உள்ளது என்று கேட்க, இரண்டு மாணவிகள் மட்டும் கைதூக்கியுள்ளனர். ஆனால், அதனை நம்பாத கல்லூரி முதல்வர், விடுதியில் இருந்த 68 மாணவியருக்கும் மாதவிடாய் சோதனை நடத்துமாறு கூறியுள்ளார். அதன்படி 68 மாணவியரையும் விடுதி ஊழியர்கள் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, உள்ளாடையைக் கழற்ற வைத்து, மாதவிடாய் பரிசோதனை செய்துள்ளனர்.இது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

;