tamilnadu

img

வெளிச்சத்திற்கு வந்த குஜராத் ரேசன் கடை ஊழல்.... பயனாளிகளின் ரேகையைப் பயன்படுத்தி கொள்ளை

அகமதாபாத்:
குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை அச்சுக்களைப் பயன்படுத்தி, குஜராத் ரேசன் கடைகளில் நடைபெற்று வந்த மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சுமார் 1 கோடியே 27 லட்சம் குடும்பஅட்டைதாரர்களின் விரல் ரேகைகள்வெளிநபர்களுக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், அதில், 1100 விரல் ரேகைஅச்சுக்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குஜராத் மாநில ரேசன் பொருட்கள்,பெருமளவில் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில், பயனாளிகளின் விரல்ரேகை மூலமாக மட்டுமே ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதால், முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை என்றுபாஜகவினர் கூறி வந்தனர். ஆனால், விரல் ரேகை அச்சுக்களையே மோசடியாக உருவாக்கி,ரேசன் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்திருப்பதை, சைபர்கிரைம் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது பயனாளிகளின் கைரேகை அச்சுக்களையே போலியாக உருவாக்கி கொள்ளையடித்து வந்துள்ளனர்.

நியாயவிலைக் கடை உரிமையாளர்கள், தங்களிடம் உள்ள பயனாளிகளின் விரல் ரேகை அடையாள விவரங்களை சட்டவிரோதமாக வெளியில் கொடுத்து, அதைப்போன்ற அச்சுக்களை செய்துள்ளனர். பின்னர் அவற்றை வைத்து பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கியது போலகணக்கு காட்டி, கொள்ளையடித் துள்ளனர்.இவ்வாறு சுமார் 1 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகைகள் மூலம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில், சூரத் நகரில் உள்ள ஒருநியாய விலைக்கடையில் மட்டும் 1100-க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்களை, சைபர் கிரைம் போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.போலி விரல்ரேகை அச்சு குறித்து, மும்பை தடயவியல் அதிகாரி ஜூட் டிசோஸா ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“விரல்ரேகை அச்சுக்கள் மூலம்எந்த ஒரு பயோ மெட்ரிக் சாதனத்தையும் இயக்க முடியும். ரேசன் மட்டுமன்றி, ரேகை மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள், ரேகை மூலம் திறக்கப்படும் பூட்டு, சிம் கார்டு விற்பனை உள்ளிட்டவற்றையும் நடத்த முடியும்” என்று அவர் கூறியிருந்தார். குஜராத்தில் அது நிரூபணமாகியுள்ளது.பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலாத் மோடி, குஜராத் மாநில ரேசன்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களில் முக்கியமானவர் என்பது கூடுதல் தகவலாகும்.

;