விருதுநகர்
தமிழக அரசு, ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சி ஊற்றவதற்காக இலவசமாக அரிசி வழங்குவது வழக்கம். அதை இந்தாண்டு கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2லட்சம் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பெரியபள்ளி வாசல் ஜமாஅத் தலைவர் முஹமது அயூப் கூறியதாவது : இந்தியாவில் வரும் ஏப்.,25 அல்லது 26 இல் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், விருதுநகரில் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆண்டுதோறும் நோன்பு கஞ்சி ஊற்ற அனைத்து பள்ளி வாசல்களுக்கும் இலவச அரிசி அரசின் சார்பில் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 2.5 லட்சம் கிலோ அரிசி வழங்கப்படும். இந்த ஆண்டு நோன்பு கஞ்சி ஊற்ற தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே, அரசின் முடிவை ஏற்பதோடு, இந்த ஆண்டு மட்டும், நோன்பு கஞ்சிக்கு தமிழக அரசு வழங்கும் அரிசியை பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதை தமிழக அரசு, கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மேலும், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி வாசல் சார்பில் அரசிற்கு நன்கொடை வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில், இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களும் சேர்ந்து ரூ.2லட்சம் வரை கொரோனா நிவாரண நிதி வழங்குவது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். பின்பு, இரு ஜமாஅத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.கண்ணனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியதோடு, முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்திற்கான வரைவோலைகளை வழங்கினர்.