விருதுநகர்:
விருதுநகர் அருகே கல்லூரி பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக இராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. பின்பு, விருதுநகர், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலர் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.
17 பேர் பாதிப்பு
இந்நிலையில், ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இராஜபாளையம் முதியவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், ஆய்வக பரிசோதகர், கணிப்பொறி இயக்குநர் மற்றும் அவரது உறவினர் என 4 பேருக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆனது. எனவே, அனைவரும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
7 பேராக குறைவு
இந்தநிலையில், அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த மூவர் மற்றும் இராஜபாளையத்தை சேர்ந்த முதியவர் என 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். எனவே,விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது.
மேலும் இருவர்
இந்நிலையில், சனிக்கிழமை மாலை, விருதுநகர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், டி.சேடபட்டியைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதும் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதில் அந்த இளைஞர் மேற்கு ஆப்பிரிக்க நாடானா கிலியில் மெக்காளிக்காக வேலை செய்து வந்துள்ளார் .இவர் சேடபட்டிக்கு கடந்த மார்ச் 21 இல் வந்துள்ளார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார். இவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா இருந்துள்ளது சனியன்று தெரிய வந்தள்ளது.
அதேநேரத்தில் விருதுநகர் அருகே உள்ள கல்லூரி மாணவிக்கு வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திக்கப்பட்ட இருவரும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், டி.சேடபட்டி மற்றும் குமாரபுரம் கிராமங்களில் சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், அவர்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலும் தயார் செய்யப்படுவதோடு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.