செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் மேல் எடையாளம் கிராமத்தில் கொரோனாவில் உயிரிழந்தவரின் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நரசிங்கராயன்பட்டியைச் சேர்ந்த 52 வயதானவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஜூலை 24ஆம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். மறுநாளே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் கிழமை இவர் உயிரிழந்தார்.இவரது விருப்பத்தின்படி உடலை இவரது சொந்த கிராமமான மேல் எடையாளம் என்ற கிராமத்தில் முஸ்லிம்களுக்கான இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அதற்கு முன்னதாக அவரது உறவினர்கள் புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த தகவலை அறிந்த கிராமத்தினர் அந்த கிராமத்தின் இரண்டு நுழைவு வாயிலிலும் சாலைகளில் பள்ளத்தை தோண்டியும் தடுப்புகளை அமைத்தும் ஆம்புலன்சை உள்ளே விடவில்லை.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் திரும்பி செஞ்சி சென்று அங்கிருக்கும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கொத்தமங்கலம் அருகே பெரியகாஞ்சகுலம் என்ற இடத்தில் மசூதிக்கு அருகே குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் உறவினர்களையும், குடும்பத்தினரையும் கவலை அடையச் செய்துள்ளது.