tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்.சுப்பிரமணியன் அறிக்கை

விழுப்புரம், மே 12-வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 139 சதுர கிலோ மீட்டர், புதுச்சேரியில் 2 சதுர கிலோ மீட்டர், ஆழமற்ற கடல் பகுதியில் 1,653 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 116 எரிவாயு கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 116 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்வதற்கான 32 ஆய்வு எல்லைகளை வேதாந்தா நிறுவனத்துக்கு வரையறுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பருவ மழை பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.வறட்சியால் பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்று வந்த கரும்பு, நெல், வாழை மற்றும் சிறுதானிய விவசாயமும் பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது குறைந்த பரப்பளவில்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆறுகளில் தடுப்பணைகள், ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, தூர் வாரி மழைக் காலங்களில் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அரசு அதற்காக நிதியை ஒதுக்கியது. ஆனால், பெயரளவில் எந்தப் பணியும் செய்யாமல் கணக்கு எழுதி அதிகாரிகளின் துணையோடு ஆட்சியாளர்கள் கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் வெகுவாக குறைந்து ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து போகும் நிலையில் உள்ளது.விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவதால் விவசாயம் பாழாகி பாலைவ னமாக மாறும். புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும், பூமி அதிகளவில் வெப்பமடையும் என்பதாலும் பல நாடுகளில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏன் இத்திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள், புதுச்சேரி அரசு இதனை அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி உள்ளது. ஆனால், தமிழக அரசு வாய்மூடி மவுனியாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை செயல் படுத்த நினைத்தால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களை திரட்டி இத்திட்டத்தை திரும்பப் பெறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்.வேதாந்தா நிறுவனம் மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆமோதித்தது கண்டிக்கத்தக்கது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதித்து, விவசாயத்தை முற்றிலும் அழித்து ஒழித்து, மக்களுக்கு புற்றுநோயை பரிசாக வழங்கும் இத்திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.இவ்வாறு அந்த அறிக்கையில் என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.