விழுப்புரம், ஜூன் 24- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட டி.புதுப்பாளயம் அருகே அண்டராயநல்லூரில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மணல் குவாரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அப்பகுதி மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலுவாக எதிர்த்தது. இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. இதனால் மணல் குவாரியின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி கிராம மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மணல் குவாரி செயல்படத் துவங்கியுள்ளது. தினசாரி நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த 18 ஆம் தேதி அந்தக் குவாரியை பார்வையிட சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் சென்ற குழுவினரை காவல்துறையினர் தடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட கூறினர்.
இதனையடுத்து குவாரியை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு என்.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இதனிடையே, மணல் குவாரியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் அனைத்து கட்சி பிரமுகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மணல் குவாரி தொடர்ந்து செயல்படும் என தெரிவித்ததால், கூட்டத்தை புறக்கணித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களும் வெளியேறினர். இதன்பிறகு திட்டமிட்டபடி அனைத்து கட்சி சார்பில் டி.புதுபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், மாவட்டக் குழு உறுப்பினர் தாண்டவராயன், ஒன்றியச் செயலாளர் சிவகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.