tamilnadu

img

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

விழுப்புரம், செப். 22 விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் திங்களன்று (செப். 23) தொடங்குகிறது.   வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி  நடைபெறுகிறது; தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன. பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பறக்கும் படை சோதனை 2 தொகுதிகளிலும் தொடங்கியது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக. திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது கட்சி தொண்டர்களிடமிருந்து திங்கட்கிழமை முதல்  விருப்ப மனு பெறுகின்றன. ஒரிரு நாளில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

போட்டியில்லை: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு 

 விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.  தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123ஆகவும், தி.மு.க. கூட்டணியின் பலம் 108ஆகவும் உள்ளன. சுயேட்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் காவல்துறையினர் தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.