வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொடர்பாக தினசரி பேட்டியளிப்பது தனது நேரத்திற்கு மதிப்பானதில்லை, ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அலறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 9.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினசரி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
அப்போது சீனாவைப் பற்றியும் உலக சுகாதார நிறுவனம் குறித்து தனக்கு தோன்றியதை, நினைத்ததை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். அதையும் உலகமுழுவதுமுள்ள அனைத்து ஊடகங்களும் பத்திரிகைகளும் வெளியிட்டன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தினசரி பேட்டிகளை நிறுத்திக்கொள்ள நினைப்பதாக தகவல்கள் கசிந்தன.
இந்தநிலையில் டிரம்ப் ஞாயிறன்று பல்வேறு கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "எதுவும் செய்யாத ஜனநாயகவாதிகள் தங்கள் பணத்தின் பெரும்பகுதியை போலி விளம்பரங்களுக்காக செலவிடுகிறார்கள். கொரோனா வைரஸ் ஒரு "புரளி" என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை அப்படி யார் சொல்வார்கள்? ஜனநாயகவாதிகள் அவர்களின் பிரதான ஊடக கூட்டாளிகளுடன் சேர்ந்து, புரளியை பரப்புகிறார்கள். அவர்கள் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டாலும் தொடர்ந்து பொய்யை பரப்புகிறார்கள்!
"மீடியாக்கள், விரோதமான கேள்விகளை தவிர வேறெதையும் கேட்காத போது வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதன் நோக்கம் என்ன? மீடியாக்கள் உண்மைகளை தெரிவிக்க மறுக்கிறது. அமெரிக்கர்கள் இதன் மூலம் போலியான செய்திகளையே பெறுகிறார்கள். எனது நேரத்திற்கும், முயற்சிக்கும் இது மதிப்பானதல்ல" லேம்ஸ்ட்ரீம் மீடியா ஊழல் மற்றும் நோய்வாய்ப்பட்டது!" எனத் தெரிவித்துள்ளார்.