வேலூர் ஆக.24- வேலூர் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக இரு மாவட்டங்கள் ஏற் படுத்தப்பட உள்ளதையொட்டி, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிய ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதன்படி, புதிதாக மாவட்டங்கள் தோற்றுவிப்பது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே.சத்தியகோபால் தலைமையில், வேலூர் மாவட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை கலையரங்கில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 முதல் 1.30 மணி வரையும், வாணியம்பாடி சின்னகல்லுபள்ளி யில் உள்ள மருதகேசரி ஜெயின் மகளிர் கல்லூரி கலையரங்கில் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்பாக மதியம் 3.30 முதல் 6.30 மணி வரை யும் நடைபெற உள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வாலாஜாபேட்டை வட்டம், மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் 30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 முதல் மதியம் ஒரு மணி வரையும் நடைபெற உள்ளது. எனவே, புதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பது தொடர்பான கருத்துகளைத் தெரி விக்க விரும்பும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக அமைப்பு கள் ஆகியோர் இக்கூட்டங்களில் பங்கேற்கலாம்.