மீரட்:
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச்சேர்ந்த காவல்துறையினர், அங்குள்ள திருநங்கையரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
திருநங்கையர் அவர்களுக்கு உள்ளாகவே சண்டை, சச்சரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக விசாரிக்கிறோம் என்ற பெயரில் திருநங்கையரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு மனிதத் தன்மையற்ற வகையில் தடிகளைக் கொண்டு திருநங்கையரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மீரட்டின் லால்குர்தி காவல் நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர்,அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததால், உ.பி. போலீசாரின் கோரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, லால்குர்தி சம்பவம் தொடர்பாக, காவல்துறை சிறப்புக் கண்காணிப்பாளர் நிதின் திவாரி, பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “திருநங்கையர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள் மோதலில் ஈடுபட்டதால் அதைக் கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.