லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில், பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக,8 அதிகாரிகளை, அம்மாநில பாஜகஅரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பாஜகஅரசானது, பசு மாடுகளைப் பராமரிக்கும் வகையில், கிராமப்புறங் களில் 750 கோசாலைகள் (மாட்டுக்கொட்டம்) அமைக்க முடிவு செய்து, அதற்காக மாநில பட்ஜெட்டிலேயே ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடுசெய்தது. இதன்காரணமாக அரசுஊழியர் குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, சிறை வளாகங்கள் என திரும்பும் இடங்களிலெல்லாம் மாட்டுக் கொட்டங்கள் அமைக்கப் பட்டன. ஆனால், தற்போது அரசுஅமைத்த மாட்டுக் கொட்டங்களில் பசுக்கள் செத்து மடிவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்மையில், பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள கோசாலையில் மட்டும் 35 பசுமாடுகள் இறந்து போயின. இதையடுத்து, கோசாலைகளில் பசுக்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்த உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டுவோர் மீது கால்நடைப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.