ரேபரேலி:
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி 4 தொழிலாளர்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக 4 தொழிலாளர்களை, ஒரு கும்பல் இடுப்பில் அணியும் பெல்ட்டால் அடித்து உதைக்கும் காட்சியும், வலிதாங்காமல் அவர்கள் அலறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் 4 பேரும் ஒரு கொத்தனார் மூலம் பஹேரி பகுதிக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். அந்த தொழிலாளர்களில் இருவர் சிறுபான்மையினர்.இதுகுறித்து பஹேரி போலீஸ் நிலைய அதிகாரி தனஞ்செய சிங் கூறுகையில், “ஒரு கட்டுமானப் பணிக்காக பஹேரியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர் 4 தொழிலாளர்களை அழைத்துவந்துள்ளார். அவர்கள் ஒரு கோயிலுக்கு அருகே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல், கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறி, அவர்களை பெல்ட்டால் அடித்து , உதைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே, தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள், செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களிடம் பசுமாட்டு இறைச்சி ஏதும் இல்லை எனக் கூறியும் எங்களை அந்த கும்பல் தாக்கியது” என்று தெரிவித்துள்ளனர்.தாக்குதலில் ஈடுபட்ட ஆதேஷ் வால்மீகி, மணிஷ் ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.