கோவில்பட்டி:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் பேரவை சார்பில் மாணவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வெள்ள நிவாரண நிதி திரட்டினர். மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சுரேஷ்பாண்டி தலைமையில் இப் பணியினை கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் சாந்தகுமாரி தொடங்கி வைத்தார். மூன்று நாட்களாக மாணவர்களால் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண நிதியான ரூபாய் முப்பதாயிரத்தை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குழுவாக சென்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் நேரடியாக வழங்கினர்.
இக்குழுவில் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் சுரேஷ்பாண்டி, பேராசிரியர் முனைவர் சாந்தகுமாரி, மாணவர் பேரவை தலைவர் வெற்றிவேல் மற்றும் கருப்பசாமி, முத்துப்பாண்டி, லோகநாயகி,விஜயலட்சுமி,லெனின் வீரசுதாகர், லட்சுமிப்ரியா, பேராசிரியர் டார்வின் ஆகியோர் பங்கேற்றனர். கிராமப்புற கல்லூரியிலிருந்து வெள்ள நிவாரண நிதியை திரட்டி வந்த கல்லூரி மாணவர்களின் பணியை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி தனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.மேலும் இக்கல்லூரி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளுக்கும் நேரில் சென்று ரூ1.50லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.