tamilnadu

தரங்கம்பாடி ,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு


தரங்கம்பாடி, ஏப்.24-நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்புசெவ்வாயன்று தொடங்கியது. பெட்ஸி எலிசபெத் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் நிறுவனர் ஹில்டா ஐசக்தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் உரையாற்றினார். குழந்தைகளின் கல்வி மேம்பாடு,வாழ்க்கை கல்வி உள்ளிட்டவைகள் குறித்து நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பெட்ஸி எலிசபெத் டிரஸ்டின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 



கயத்தாறில் மாட்டுவண்டி போட்டி: கடம்பூர், மதுரை வண்டிகள் முதலிடம்


தூத்துக்குடி, ஏப்.24-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அயிரவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கோடைவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசன் துவக்கி வைத்தார். முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி போட்டியில் 12 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த போட்டியில் கடம்பூர் கருணாகரராஜா மாட்டு வண்டி முதலிடத்தை பெற்றது. நெல்லை மாவட்டம் நாலந்தா உதயம் துரைப்பாண்டி மாட்டு வண்டி 2-வது இடத்தினையும், ஒட்டப்பிடாரம் மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டி 3-வது இடத்தினையும் பெற்றது.இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு போட்டியில் 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 12 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை மாவட்டம் பாண்டிகோவில் பாண்டியராஜன் மாட்டு வண்டி முதல் இடத்தையும், கடம்பூர் கருணாகரராஜா மாட்டு 2-வது இடத்தையும், அயிரவன்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாட்டு வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன. இதனை தொடர்ந்து விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




உடல் நலக்குறைவு: இளைஞர் உயிரிழப்பு


திருநெல்வேலி, ஏப்.24-ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜனராஜ் என்பவரது மகன் நரேஷ்(31). இவர் ரயில்வே கான்ட்டிராக்டரிடம் வேலை செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் தண்டவாள பணிகள் நடைபெற்றதால் அங்கு நரேஷ் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே நெல்லையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்துள்ளார். வசவப்பபுரம் அருகே வரும் போது திடீரென ஆட்டோவில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனேஅவரை பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவேநெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.