tamilnadu

தஞ்சாவூர் மற்றும் தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

வாட்டாக்குடி இரணியன் நினைவிடத்தில் அஞ்சலி

தஞ்சாவூர், மே 7-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்தவாட்டாக்குடி வடக்கு கிராமத்தில் உள்ள வர்க்கப் போராட்ட தியாகி வாட்டாக்குடி இரணியனின் நினைவிடத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு மதுக்கூர் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் வை.சிதம்பரம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், ஏ.எம்.வேதாசலம், எஸ்.சுப்பிரமணியன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரணியன் நகர், வாட்டாக்குடி வடக்கு நினைவுஸ்தூபி அமைந்துள்ள இடம் ஆகிய இரு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.


தமிழ்ப் பல்கலையில் புதிய முதுகலை படிப்பு துவக்கம்

தஞ்சாவூர். மே 7-தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுகலை போன்ற பட்டப் படிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன் கருதி, தற்போது ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.  +2 பயின்ற மாணவர்களுக்கு, நேரடியாகப் பல்கலைக்கழகப் பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த தமிழ் அறிஞர்களை உருவாக்கவியலும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இப்படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள/ நிறைவு செய்து அளிக்க இறுதி நாள்: 20.05.2019. மேலும் விவரங்களுக்குwww.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம் என பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துக் குமார் தெரிவித்துள்ளார். 


தமிழ்ப் பல்கலையில் நூல் விற்பனை தேதி நீட்டிப்பு

தஞ்சாவூர், மே 7-தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை சார்பில் தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு 50 சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை செய்யும் காலத்தை வரும் 23-ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. இதுவரை ரூ.1 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந் நூல்கள் பதிப்புத்துறை, கீழராசவீதி, அரண்மனை வளாகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் மற்றும் 04362-274581, 94438-64672 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் அரண்மனையில் ஆய்வு

தஞ்சாவூர், மே 7-இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோயில்கள், புராதன தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தஞ்சாவூர் பெரியகோயில், சுவாமிமலை முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பிரிவு காவல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். கலைக்கூடம், சரசுவதி மகால் நூலகம், தர்பார் மண்டபம், ஒலி, ஒளிக்காட்சி அரங்கம் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டனர். பாதுகாப்பு அடிப்படையில் எங்கெங்கு கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.


4 வாலிபருக்கு ஓராண்டு சிறை

தஞ்சாவூர், மே 7-தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளுக்கு, அண்மையில் ஓராண்டிற்கு அமைதி பேணுவதற்கான பத்திரத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதில் தஞ்சையைச் சேர்ந்த கருப்பு பிரபா(30), சுருட்டை ராஜ் என்ற ராஜீவ் காந்தி(28), சூர்யா(27), மணியரசன்(28) ஆகிய நால்வரும், ஓராண்டுக்கு குற்றச்செயல்களில் ஈடுபடாமல் அமைதி காப்பதாக கையொப்பமிட்டிருந்தனர். ஆனால் ஓராண்டு காலம் முடிவதற்குள்ளாகவே, தஞ்சை தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு, நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நால்வருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 


சாலைகளில் உலாவும் குதிரைகள்  

தரங்கம்பாடி, மே 7-நாகை மாவட்டம் பொறையார், காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பெரியகூத்தூர் பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் குதிரை, பன்றிகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலைகளில் குதிரைகள், பன்றிகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறையார் ராமன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.