tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காவல்துறை  வழக்குப் பதிவு 

தஞ்சாவூர், டிச.20- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளர் அருண்குமார், மாநகரத் தலைவர் சிரில் இமான், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

வழக்குப் பதிவு 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் எம்ஜி.ஆர். கலைக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் சங்க சீர்காழி வட்டத்தலைவர் விக்னேஷ் சர்மா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 மாணவிகள் உட்பட 150 மாணவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வகுப்புகளுக்கு திரும்புகையில் வருகை பதிவு மறுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் சர்மா, அமுல்ராஜ், கபிலன், தனுஷ்கோடி ஆகிய நால்வர் மீதும் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.