tamilnadu

புதுக்கோட்டை,நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளி அவதி

புதுக்கோட்டை, மே 6- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நகரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற நோயாளியை மேல்சிகிச்சைக்காக அவசரமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தனியார் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் என்ற இடத்தில் வந்த போது ஆம்புலன்ஸில் ஏற்பட்ட பழுதால் ஆம்புலன்ஸ் அங்கேயே நின்று விட்டது.பாதி வழியில் பரிதவித்த நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலையைப் பார்த்து அவ்வழியாகச் சென்றவர்கள் 108 சேவை மையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நோயாளியை தனியார் ஆம்புலன்சில் அழைத்து வந்ததால் தங்களால் வர முடியாது என்று 108 ஆம்புலன்ஸ் மையத்தில் பதில் கூறப்பட்டதாக தெரிகிறது.இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஆலங்குடியில் உள்ள தமுமுக அமைப்பின் சார்பில் செயல்படும் இலவச ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமைப்பின் இலவச ஆம்புலன்சில் நோயாளி ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 45 நிமிடத்துக்கும் மேலாக நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் சாலையில் பரிதவித்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.


சீர்காழி இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், மே 6-நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 3 வருட முழுநேர அரசுச் சான்றிதழுடன் கூடிய பயிற்சியில் சேர மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்.இந்த இசைப்பள்ளி, 5/10, புழுகாப்பேட்டைத்தெரு, சீர்காழி என்னும் முகவரியில் இயங்கி வருகிறது. விண்ணப்பிக்க 13 முதல் 23 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி சீர்காழி அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவந்திபுரம் சாலைப்பணி எப்போது முடியும்?

2 மாதங்களாக கிடக்கும் ஜல்லிக்கற்கள்

திருநெல்வேலி, மே 6-விக்கிரமசிங்கபுரம் அருகே சாலை சீரமைப்பு பணிக்கு கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் கடந்த 2 மாதங்களாக அப்படியே கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் தாமிரபரணி தெரு, நக்கீரர் தெரு, இளங்கோவடிகள் தெரு, மாணிக்கவாசகர் தெரு, தேசிய விநாயகர் தெரு, பாலாறு தெரு ஆகிய தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனை சீரமைப்பதற்காக யூனியனில் இருந்து ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. பின்னர் அதற்கான பணிகளும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கின.இதனால் சாலைகள் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் சாலைகளில் கொட்டப்பட்டன. புதிய சாலை வரப்போகிறது என அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பால் சில நாட்களில் சாலை பணிகள் முடங்கின. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்த பிறகும்,சாலை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதிபொதுமக்கள் சாலைகளில் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டு,பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர, நான்குசக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிக்கப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர்.இதேபோன்று சிவந்திபுரம் பஞ்சாயத்து வராகபுரம்-ஆறுமுகம்பட்டி இணைப்பு சாலை, ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வாறுகால் தோண்டப்பட்டு அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன. இதனால் சிறுவர்கள் விளையாடும்போது, தவறிவிழுகின்றனர். எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும்என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.