தஞ்சாவூர் ஆக.30- தஞ்சையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அம்மனுவில், "பேராவூரணியை அடுத்த பின்னவாசலில் உள்ள 153 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி குடிமராமத்து பணிக்காக அரசு ரூ 40 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதனை கிராம மக்களையோ, பாசனதாரர்களையோ கலந்தாலோசிக்காமல், சிலர் அந்த நிதியை மோசடி செய்ய முயல்வதாகக் கூறி, கிராம பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரியதற்காக, பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் வீரக்குமார் என்பவர் சிலரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேராவூரணி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை தாமதமாகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில், மேட்டூரிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் குறைந்தபட்சம் 8 ஆயிரம் கனஅடியும், வெண்ணாற்றிலிருந்து 8000 கன அடியும், கல்யாண ஓடை வாய்க்காலில் 2,500 கன அடியும் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் முறை வைக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டல் தான் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தி மேட்டூரில் திறக்கப்படும் நீரின் அளவை உயர்த்தியும், கல்லணைக் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கடந்தகால விவசாயத்திற்கு பணமின்றி கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து பயிர் கடன் பெற்று உள்ளனர். விவசாயம் பொய்த்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால், நகைகள் திருப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு விவசாய பணிகள் துவங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நகைகள் ஏலம் விடப்படும் என ஏல அறிவிப்பினை வங்கிகள் வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே, விவசாயிகள் கடும் பிரச்சினைகளை சந்திக்கும்போது, நகைகளை ஏலம் விடும் நடவடிக்கையை அவர்களைத் துயரப்பட வைத்துள்ளது. எனவே வரும் ஓராண்டு வரை கூட்டுறவு மற்றும் வங்கிகள் நகைகளை ஏலம் விடும் நடவடிக்கைகளை கால நீட்டிப்பு செய்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.