tamilnadu

பெரம்பலூரில் தொடர் கொலை சம்பவங்கள் : பாதுகாப்பற்ற சூழலால் பொதுமக்கள் அச்சம் நடவடிக்கை கோரி சிபிஎம் மனு

பெரம்பலூர், ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை தலைமை வகித்தார்.  கூட்டத்தில் கீழ்க்கண்ட பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கோரிக்கை மனு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அம்மனுவில், தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஓரளவிற்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்பொழுது மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான கே.கே.நகர் நாராயணன் மகன் கபிலன் (27) என்பவர் 1.6.2020 இரவு 8 மணியளவில் தீயணைப்புத் துறை அருகே 10-க்கும் மேற்பட்ட நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அடுத்து 2.6.2020 அன்று மாலை சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வல்லத்தரசு (22) என்பவர் விளாமுத்தூர் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் 8 லட்சம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்துள்ளனர்.  நகர்ப் பகுதியிலேயே இது போன்ற தொடர் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். சமீப காலமாக பெரம்பலூரில் ரவுடிக்கும்பலின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொரும்பான்மையானோர் முகக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர்.  பேருந்துகளில் அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. வங்கிகள் மற்றும் ஏடிஎம் செல்லும் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையின் அலட்சிய போக்கே இதற்கு காரணம். மேலும் இதுபோன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.  இதற்கு சிபிஎம் வன்மையாக கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களின் அச்சத்தையும் பீதியையும் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மனுவில் தொவிக்கப்பட்டுள்ளது.