கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச தொடர்களை நடத்தும் நாடுகள் தங்களது அணியை வெற்றிபெற வைக்க ஆடுகளத்தை தங்களுக்குச் சாதகமாக அமைக்கும். இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த மாதிரியான முறையைப் பின்பற்றி உள்ளூரில் தொடரைக் கைப்பற்றும். ஆனால் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆடுகள அமைப்பு விஷயத்தில் தங்களது அணிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாகி யுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ள தாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்விங் மன்னன் ஆண்டர்சன் குற்றம்சாட்டி யுள்ளார். ஆண்டர்சனின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. இங்கிலாந்து மைதானங்களில் புற்கள் அதிகமாகக் காணப்படும். இதனால் பந்து எப்பொழுது ஸ்விங் ஆகும், எப்பொழுது எகிறும் என கணிப்பது கடினம். மேலும் இங்கு டியூக்ஸ் வகை பந்துகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பயன்படுத்துவதால் வெளிநாட்டு அணிகள் இந்த மாதிரியான கடினமான ஆடுகளத்தில் சற்று திணறும். கடினமான ஆடுகளங்களில் நன்றாக விளையாடும் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கேட்கவா வேண்டும். ருத்ரதாண்டவம் ஆடிவிடும். ஆஸ்திரேலிய அணி வேகத்தை அதிகம் விரும்பும். பேட்டிங்கில் வேகப்பந்துவீச்சை நன்கு விளாசும், பந்துவீச்சில் முரட்டுத்தன மான வேகப்பந்துவீச்சை ரிலீஸ் செய்யும். ஆனால் இங்கிலாந்து ஸ்விங் மற்றும் வேகத்தை சரிசம மாகப் பயன்படுத்தும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் வேகத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களை அளவிற்கு அதிக ஸ்விங் ஆகாவிட்டாலும் 4 மணிநேரம் ஸ்விங் ஆகும். ஆனால் ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஆடுகளங்களும் 4 நாட்கள் உறங்காமல் விழித்து இருந்தன. ஆடுகளம் உறங்காமலிருந்தால் பந்து பவுன்சருக்கு சாதகமாக எகிறும். இந்த மாதியான உறங்கா நிலை ஆடுகளங்கள் ஆஸ்திரேலிய நாட்டில் அதிகம் உள்ளன. அவர்களுக்கு சாதகமாக அவர்கள் அமைக்கலாம். ஆனால் பிரிட்டன் மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏன் உறங்கா நிலை ஆடுகளத்தை உருவாக்கியது என்பதுதான் சர்ச்சைக்குச் சவால் விடும் விஷயமாக முளைத்துள்ளது. ஏன் இப்படி ஆடுகளம் அமைக்கப்பட்டது என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஆண்டர்சன் நேரடியாக ஆடுகள சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளார். ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்த விஷயம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.