பிரபல கார் பந்தய தொடரான பார்முலா ஒன் தொடரில் 21 சுற்றுகள் நடத்தப்பட்டு ஆண்டுதோறும் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படும். நடப்பாண்டில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 9-வது சுற்று ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் என்ற பெயரில் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரெட்புல் அணியின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் வெற்றி பெற்று அசத்தினார். இரண்டாவதாக பெராரியின் சார்லஸும், மூன்றாவதாக மெர்சிடிஸ் அணியின் போட்டாஸும் வந்தனர். மற்றொரு பெராரி வீரர் வெட்டல் நான்காவதாகவும், மெர்சிடிஸ் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஹாமில்டன் ஐந்தாவதாகவும் வந்தனர். 9-வது சுற்று முடிவில் 197 புள்ளிகளுடன் லூயிஸ் ஹாமில்டன் (மெர்சிடிஸ்) முதலிடத்திலும், 166 புள்ளிகளுடன் போட்டாஸ் (பெராரி) இரண்டாவது இடத்திலும், 126 புள்ளிகளுடன் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நடப்பாண்டு பார்முலா ஒன் தொடரின் பெரும்பாலான சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெர்சிடஸ் அணியின் வெற்றி நடைக்கு ரெட்புல் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 10வது சுற்று தொடரான பிரிட்டன் கிராண்ட்பிரிக்ஸ் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.