திருவள்ளூர், அக். 5 - 2019 - 2020ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 16 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம், நீச்சல், டென்னிஸ், வளைகோல் பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். 100 மீ, 200மீ. 800மீ (ஆண்கள்) 400 மீ (பெண்கள்) நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஆகிய தடகளப் போட்டிகள் நடத்தப்படும். டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1.1.2005க்கு பிறகு பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். டென்னிஸ் விளையாட்டுப் போட்டி, திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் மினி விளையாட்டரங்கில் (டாலிபின் நீச்சல்குளம் அகாடமி) 16.10.2019 அன்று காலை 9.00 மணியளவில் தொடங்கி நடத்தப்படும். இப்போட்டியில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஆண், பெண் இருபாலரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயது மற்றும் படிப்புச் சான்றிதழ் பெற்று போட்டிகள் நடைபெறும் அன்று காலை 8. மணியளவில் நுழைவு படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். நுழைவு படிவம் சமர்ப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தடகளம், நீச்சல் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களும், குழுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் 2 அணிகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.