திருப்பூர்:
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த தோழர் கே.தங்கவேலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
கோவை தனியார் மருத்துவமனையில் ஞாயிறன்று அதிகாலை2.30 மணியளவில் கே.தங்கவேல் உயிரிழந்தார். அவரது உடல் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டு ஆத்துப்பாளையம் சாலை மின்மயானத்தில் காலை 10.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. இதில் அவரது குடும்ப உறவினர்கள் பங்கேற்றனர்.கே.தங்கவேலுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திருப்பூர் அவிநாசி சாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாககாலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கட்சியின்மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தலைமை ஏற்றார்.
இதில் கட்சியின் மாநில செயற்குழுஉறுப்பினர்கள் பெ.சண்முகம், க.கனகராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, சி.பத்மநாபன், கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, திமுக திருப்பூர் வடக்குமாவட்டச் செயலாளர், முன்னாள் மேயர் க.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் இரா.ஜான், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சு.சிவபாலன், கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவி, தமாகா மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.ரவிக்குமார், த.பெ.தி.க நிர்வாகி சண்.முத்துக்குமார், தி.க. நிர்வாகி துரைராஜ், ஆதித்தமிழர் பேரவை சிந்தனைச் செல்வன் ஆகியோரும், திருப்பூர் தொழில் துறை சார்ந்த சைமாசங்க துணைத் தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், சாயஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி காந்தி, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தோழர் கே.தங்கவேல் உருவப்படத்துக்கு மலர் தூவி கண்ணீர் மல்கஅஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ், ஆர்.குமார், டி.ஜெயபால், எஸ்.சுப்பிரமணியம் உள்பட மாவட்டக்குழு, இடைக்குழு செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், மாற்றுக் கட்சியினர், பொது மக்கள் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.