திருப்பூர், ஏப். 28 -திருப்பூரில் பாறைக்குழியில் குளிப்பதற்குச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருப்பூர் கொங்கு பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோகுல் (16). இவரது நண்பர் கொங்கு பிரதான சாலை குமரன் காலனியை சேர்ந்த பி.ஹரிஹர சேதுபதி (16). திருப்பூர் கூலிபாளையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருவரும் 11ஆம் வகுப்பிலிருந்து தற்போது12ஆம் வகுப்பு செல்ல இருந்தனர்.தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடன் பள்ளியில் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த சுஜித் (14) என்பவரையும் சேர்த்துக் கொண்டு மூவரும் ஞாயிறன்று அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு சுமார் 200 அடி ஆழமுள்ள பாறைக்குழி ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் நின்றுள்ளது.மூவரில் சுஜித் பாறைக்குழிக்கு மேலே நிற்க கோகுலும், ஹரிஹர சேதுபதியும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளனர். முதலில் இறங்கிய கோகுல் நீரில் மூழ்குவதைப் பார்த்து ஹரிஹர சேதுபதி அவரைக் காப்பாற்றச் சென்றதாக தெரிகிறது. ஆனால் இருவரும் தத்தளித்து நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுஜித் தொடர்ந்து சத்தம் போட்டுள்ளார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்து, அனுப்பர்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட மீட்புப்படை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி உயிரிழந்த நிலையில் இருவரது உடல்களையும் மீட்டனர். அவர்களது உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அம்மாபாளையத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான இப்பாறைக்குழி கடந்த 7ஆண்டுகளுக்கு முன் குவாரியாக இருந்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அனுப்பர்பாளையம் காவல் துறையினர் தெரிவித்தனர்.