திருப்பூர், ஜன. 20- திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று பொது மக்களிடையே சாலை பாதுகாப்புத் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பில் 31- வது சாலை பாதுகாப்பு வார விழா ஜன.20 முதல் 27 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன்ஒருபகுதியாக திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. அப்போது சாலை விதிமுறைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சாலை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி விபத்தினை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாரயணன், உதவி ஆணையர் நவீன்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார், முருகானந்தன், தங்கவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.