tamilnadu

img

கிராம சபை கூட்டத்திற்கு தயாராகும் மக்கள்

அவிநாசி, ஜன. 25- அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் ஊராட்சியில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காண கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டர்பாளையம் ஊராட்சியில் சுமார் 4  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து கோரிக்கைகளையும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, ஒட்டர் பாளையம் புதிய  காலனி, ஏ.டி.காலனி, பழைய ஏ.டி. காலனி ஆகிய பகுதிகளில் குளியல் அறை கொண்ட பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். ஸ்டார் நகர்-1, ஸ்டார் நகர்-2, ஒட்டர்பாளையம் பகுதியில் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட வேண்டும். தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.  பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதுடன், ஊராட்சி முழுவதும் சேதமடைந்துள்ள கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தடுப்புச் சுவர்களை சீரமைப்பதோடு, பழுதடைந்த நிலையில் இருக்கும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மேலும், தண்ணீர் பற்றாக்குறையை போக்க புதிதாக இரண்டு  மேல்நிலை தொட்டிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இச்சூழலில் ஞாயிறன்று கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், மேற்குறிப்பிட்ட அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.