tamilnadu

img

கிராம சபை கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்  பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே உப்பிலிபாளையம் கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரி குறித்த நேரத் தில் வராததால் ஆவேசமடைந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தன்று தமிழகத்தின் பிற கிராமங்களைப் போல உப்பிலிபாளையம் ஊராட்சியிலும் கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த நேரத்தில் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வராமல் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதிசாமி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கருவலூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையறிந்த காவல்துறை ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான காவல் துறையினர் பொதமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்ட போது, அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் உள்ளன. எல்லா இடத்திற்கும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செல்ல வேண்டும். எனவே குறித்த நேரத்திற்கு  இப்பகுதிக்கு வரமுடியவில்லை என்று தெரிவித்தனர்.