அவிநாசி ஏப்.25- அவிநாசி பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கருப்புக்கொடி ஏந்தி சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் அறைகூவல் படி , தமிழக அரசின் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறு, குறு விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 10 ஆயிரம் உதவித் தொகையாக உடனே வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.வைரஸ் பாதிப்புள்ள மாவட்டங்களை அனைவருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யக் வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் வேண்டும். 144 தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சேவூர் அருகே வடுகபாளையம், போதம்பாளையம், பழங்கரை, அவினாசிலிங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கருப்புக் கொடி மற்றும் கோரிக்கை பதாகைகள் ஏந்தி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க அவிநாசி பகுதி நிர்வாகிகள் எஸ். வெங்கடாசலம், முத்து ரத்தினம், ஆர்.பழனிச்சாமி, ஏ. ஈஸ்வரமூர்த்தி, பி. பழனிச்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இப்போராட்டம் குறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி. ரவிந்திரன் தெரிவிக்கையில், விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகளின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழங்கவேண்டிய நிவாரணம் மற்றும் கரும்பு ஆலைகள் தர வேண்டிய பாக்கிகளை வசூலித்து விவசாயிகளின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.