திருநெல்வேலி, ஜூன் 15- பீடித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் துணைத்தலைவர் சூசைஅருள் சேவியர் தலைமையில் நெல்லையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் முகக் கவசம் அணிந்து சமூக விலககளுடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு 1.4.2020 முதல் பஞ்சபடி உயர்வு 1000 பீடிக்கு ரூ.10.62 பீடி கம்பெனிகள் அரியர்ஸ்வுடன் மொத்த கூலி ரூ.207.86 வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கொரோனா நிவாரண உதவியாக மாதம் ரூ.7500, 20 கிலோ அரிசி மத்திய சேமநல நிதி மூலமாகவும் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மாநில அரசுகள் வழங்கிய நிவாரணம் போல் வழங்கிட கோரி ஜூலை மாதம் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் பீடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தரமான இலை 1000 பீடிக்கு 700 கிராம் அனைத்து பீடி கம்பெனிகளும் வழங்கிட வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக கட்டாய கடன் வட்டியை சுய உதவிகுழுக்களில் வசூலிப்பதை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.