tamilnadu

அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குக! ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருநெல்வேலி, ஏப்.25-அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் சோ.முருகேசன், மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ் ஆகியோர் கூட்டாக தமிழகமுதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை எனஆண்டுக்கு இரண்டு முறைஅகவிலைப்படி உயர்வு வழங்குவது வழக்கம். மத்திய-மாநில அரசுகளால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்காததால், தமிழக அரசுஊழியர்கள் 9 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். கடந்த காலங்களில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோதும்கூட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையிலும் கூட அகவிலைப்படி உயர்வு குறித்தஅறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை அரசுஉடனடியாக வழங்க வேண்டும்.மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது கேட்கப்பட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து அரசு எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் அரசு திரும்பப் பெறவில்லை. இது அரசு ஊழியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.