திருநெல்வேலி:
மணியாச்சி அருகே சரக்கு ஆட்டோ காற்றாற்று ஓடையில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் பலியாகினர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 பெண் விவசாயத் தொழிலாளர்கள் சரக்குகள் கொண்டுசெல்லும் ஆட்டோவில் செவ்வாயன்று காலை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்காக வந்தனர்.
ஆட்டோவைத் திருமலைக் கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை(50) என்பவர் ஓட்டினார். மணியாச்சி காவல் நிலையத்துக்கு முன்பு சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ‘எஸ்’ வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி, காற்றாற்று ஓடையில் கவிழ்ந்தது. ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால், அனைவரும் இடுபாடுகளில் சிக்கி அலறினர். அப்பகுதி மக்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதில், மூச்சுத் திணறி மணப்படை வீடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள் (30), சுடலை மகள் ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலையரசி (48),மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54), வேலு மனைவி கோமதி (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர், சட்டமன்றஉறுப்பினர் சண்முகையா மற்றும் மணியாச்சி உட்கோட்டக் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம்ஆட்டோவை மீட்டு, சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர்.காயமடைந்த 21 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துதொடர்பாக மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சித்திரை என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.