திருநெல்வேலி:
கொரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் இருந்து பிறமாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகள் இயங்கின. வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கை காரணமாக தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு 6-வதுமாதமாக தொடர்கிறது. ஒவ்வொரு மாதஊரடங்கு நீடிப்பின் போதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் மண்டலங்களுக்கு இடையே50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது தளர்வு அறிவிப்பில் செப்டம்பரில் திங்கள் முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசுப் பேருந்து மற்றும்ரயில் போக்குவரத்துக்கு அரசு அனுமதித்த நிலையில் நெல்லை மண்டலத் திற்கு உட்பட்ட போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 60% புறநகர் பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு இயக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்துசென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு 500 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்படுகின்றன. நெல்லை, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வெளியூர் செல்ல பொதுமக்கள் தேவையறிந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. பயணிகளுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பேருந்துகளில் 35 பயணிகள் மட்டுமே பயணம் செய்யக் கூடிய வகையில் வழிமுறைகள் வழங்கப்பட்டு ஓட்டுநர்கள் மற்றும்நடத்துனர்கள் அதனை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதை தொடர்ந்து திங்கள் அதிகாலை முதலே பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வெளியூர் பயணத்தை தொடங்கினர்.
மேலும் நெல்லையில் புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிநடப்பதால் அதன் ஒரு பகுதியில் இருந்துமதுரை, திருச்சி கோவை, உள்ளிட்டபகுதிகளுக்கும், புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட் டன. இதே போல் தூத்துக்குடியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். 100% பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.