tamilnadu

img

வ.உ.சி துறைமுகம் 7.41 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி, மார்ச் 5-     தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 7.41 இலட்சம் டிஇயு சரக்குபெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து துறைமுகசபை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 02.03.2020 அன்று 7.41 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு கடந்த நிதியாண்டில் கையாண்ட அளவான 7.39 இலட்சம் டிஇயு சரக்குபெட்டகங்களை விட அதிகளவில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையானது கடந்த நிதியாண்டுடன்  ஒப்பிடுகையில் 9.51 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது (கடந்த நிதியாண்டு இதே தருணத்தில் 02.03.2019 அன்று  6.76 டிஇயு சரக்கு பெட்டகங்கள்  கையாளப்பட்டது). ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதனை படைத்து வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு 02.03.2020 வரை 33.11 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு கடந்த நிதியாண்டு இதே தருணத்தில் (02.03.2019) கையாண்ட அளவான 31.44 மில்லியன் டன் சரக்குகளுடன்  ஒப்பிடுகையில் 5.30 சதவிகித விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த சரக்குபெட்டக முனையங்கள், சரக்குபெட்டக நிலையங்கள், சுங்கதுறை முகவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கீ. ராமச்சந்திரன், பாராட்டினார்.  மேலும் அவர் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தடையற்ற சாலை வசதி, இரயில் இணைப்பு, சரக்குபெட்டக முனையத்தின் சீர்மிகு உற்பத்தி திறன் மற்றும் திறமையான சேவைகள் ஆகியவை துறைமுகத்தை தொடர்ச்சியான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் சரக்குபெட்டகம் கையாளுவதில் தமிழ்நாட்டின் முதல் துறைமுகமாக  வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை என்று கூறினார். இவ்வாறு  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.