தூத்துக்குடி, ஏப்.25 - சுழற்சி முறை பொதுப்பணியிட மாறுதலை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமூப்பு அடிப்படையில் பணியிட மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இளநிலை உதவியாளர் தேர்வைகாலதாமதமின்றி நடத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தூத்துக்குடியில் சிதம்பர நகர்பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல்,மாவட்ட துணைத் தலைவர் ஞானராஜ், நிர்வாகிகள் முருகன், முத்துமுருகன், ஜெகன் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.