tamilnadu

img

கேரளத்தின் மறுவாழ்வுக்காக மாபெரும் தரிசுநில சாகுபடித் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்:
கேரளத்தில்  கொரோனாவு க்கு  பிந்தைய மறுவாழ்வுக்காக 1.09 எக்டேரில் மாபெரும் தரிசு நில சாகுபடித் திட்டத்தில் ஓராண்டிற்குள் ரூ.3000 கோடி செலவிடப்படப்பட உள்ளது, இதில் ரூ.1500 கோடி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டங்களிலிருந்து கண்டறியப்பட உள்ளது. மீதமுள்ள தொகை நபார்டு மூலமும், கூட்டுறவு சங்க கடன்களாகவும் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

புதனன்று நடந்த  கொரோனா  குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேலும் கூறியதாவது: தரிசு நில சாகுபடிக்கான மிகப்பெரிய திட்டம் அடுத்த மாதம் தொடங்கும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இதற்கேற்ப வருடாந்திர திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி மே 15க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். தோட்டங்களும், வயல்களும் உட்பட 1.09 லட்சம் எக்டேர் தரிசு நிலம் கேரளத்தில் உள்ளது. தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு அரசு உதவும். மற்ற இடங்களில் நில உரிமையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் சுய உதவிக்குழுக்கள், குடும்பஸ்ரீ மற்றும் பஞ்சாயத்து குழுக்களால் பயிரிடப்படும்.

புதிய சந்தைகள் திறப்பு
காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், குளிரூட்டும் முறையை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் விளைச்சலுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் ஓணத்திற்கு முன்னதாக ஜூன்-செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும். சந்தை திறனை அதிகரிக்க கிராம மற்றும் நகர்ப்புற சந்தைகள் திறக்கப்படும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான திட்டத்தை தொழில்துறை துறை உருவாக்கும். கால்நடை செல்வத்தை அதிகரிப்பது மற்றும் பால், முட்டை , மீன் உற்பத்தி ஆகியவை திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்புகிறவர்களை மீண்டும் விவசாயத்திற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம். திட்டத்தை வெற்றி பெறச்செய்ய மாநிலம் முழுவதும் இளைஞர் கழகங்களின் (கிளப்) பதிவு நடைபெறும். நெருக்கடிகளையும் சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டு முடிந்தவரை இளைஞர்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்

தொற்று 10,குணமானோர் 10
கேரளத்தில் புதனன்று மேலும் பத்து பேருக்கு கொரோனா உறுதியானது. ஆறு பேர் கொல்லம் மாவட்டத்தையும் தலா இருவர் திருவனந்தபுரம், காசர்கோடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். இதில் மூவர் சுகாதாரத்துறையினர், ஒருவர் காசர்கோடு காட்சி ஊடக ஊழியர். கொல்லத்தில் 5 பேருக்கு தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டது. ஒருவர் ஆந்திராவிலிருந்து வந்தவர். திருவனந்தபுரத்தில் ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர். காசர்கோடில் இருவருக்கு தொடர்பு மூலம் தொற்று ஏற்பட்டது. கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் தலா மூவர், பத்தனம்திட்டயில் ஒருவர் என பத்து பேர் குணமடைந்துள்ளனர்.  

திரிச்சூர், ஆலப்புழா, வயநாடு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் யாரும் இல்லை. மாநிலம் முழுவதும் தற்போது 108 தீவிர பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) உள்ளன. கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 495. தற்போது 20,673 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 20,172 நபர்கள் வீடுகளிலும், 51 நபர்கள் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடி
கேரளம் அசாதாரணமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக முதல்வர் கூறினார். வருவாயில் பெரும் வீழ்ச்சியை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியான நெருக்கடி தாங்க முடியாததாக உள்ளது. நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிகளில் ஒன்றாக அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் அடுத்த 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதை அமல்படுத்துவதற்கான சட்டம் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன்படி அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநரிடம் பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் கிடைக்கும் தொகையும், கவுரவத் தொகையும் குறைக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல்
கொரோனா சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுசீரமைப்பு செய்வதற்கான பணி தடைபட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தலா ஒரு வார்டு புதிதாக உருவாக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக வார்டு மறு வரையறை செய்வது  கொரோனா சூழ்நிலையில் சாத்தியமில்லை. எனவே, தற்பொதுள்ள வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்பது அரசின் நிலைப்பாடு என முதல்வர் கூறினார்.