tamilnadu

img

சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக.... காவல் துறை தலைவருக்கு சிபிஎம் மனு

தேனி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தேனி  மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், காவல் துறை தலைவருக்கு (சென்னை) செவ்வாயன்று அனுப்பியுள்ள மனு  விபரம் வருமாறு
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பும், அதையொட்டி சமூக இடைவெளியை அமல்படுத்துவதில் காவல்துறையினர் பல இன்னல்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை நாங்கள் பாராட்டுகிறோம்.

புலிக்குத்தி ஊராட்சியில் தற்போது தலைவராக உள்ள சுப்புராஜூம் அவரது    சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததற்காக கடந்த காலத்தில் அவர்களை சாதியிலிருந்து விலக்கி வைத்தார்கள். இது சம்பந்தமாக எங்கள் கட்சியின் சார்பில் மாவட்ட, வட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதுமுதலே முரண்டுபாடு இருந்து வருகிறது.

சின்னமனூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி மற்றும் ஈஸ்வரியை ஆய்வாளர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதுபோல் சின்னமனூரைச் சேர்ந்த மணிகண்டன், புலிக்குத்தியைச் சேர்ந்த டீக்கடை பால்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளரின் நடவடிக்கை  மீது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், தங்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் புலிக்குத்தி கிழக்குத் தெருவில் மட்டன் கடை நடத்தி வந்த பெருமாள், கோழிக்கறி கடை நடத்தி வந்த பி.எஸ். பாண்டியன், உதயன் ஆகியோரிடத்தில் கொரோனா தடுப்பிற்காக அங்கு வந்த போலீசார் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகமும், மற்றவர்களும் தான் நீங்கள் மட்டன், கோழி கடை போடுவதை எஸ்.பிக்கும், டி.எஸ்.பிக்கும் புகார் கொடுத்துள்ளனர் என கூறி, அப்பகுதி மக்களிடம் கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறை பரப்பியுள்ளனர். இது திட்டமிட்டு ஊர்மக்களை மோத விடும் காரியத்தை செய்வதாக உள்ளது.

போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பதிவான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கெப்புராஜை 21.4.2020 அன்றிரவு 7 மணியளவில் விசாரிக்க வந்த ஆய்வாளர், தோழர் கே.எஸ். ஆறுமுகம் வீட்டிற்கும் வந்துள்ளார். அப்போது அவர் இல்லாததால் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த பெண்களை அதட்டி வீட்டிற்குள் போகச் சொல்ல, வீட்டிலிருந்த விஸ்வநாதன் என்பவர் வீட்டுத் திண்ணையில் தானே உட்கார்ந்துள்ளார்கள் எனக் கூறியவுடன், வீட்டிற்குள் புகுந்து விஸ்வநாதனை சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து வண்டியில் ஏற்றியுள்ளார்.

அவரோடு கெப்புராஜ் உட்பட மூன்று பேரை வண்டியில் ஏற்றினார். இதையறிந்து அங்கு வந்த கே.எஸ். ஆறுமுகம் இதுபற்றி கேட்டதற்கு, ஆய்வாளர் வாய்க்கு வந்த படி பேசிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சம்பந்தமில்லாத ஆறுமுகத்தை வேண்டுமென்றே கெப்புராஜ் பெயருடன் வழக்கில் சேர்த்துள்ளார். அதன் விளைவு கோர்ட் உத்தரவுபடி சின்னமனூர் காவல் நிலையம் சென்று இன்று (27.04.2020) ஆஜராகும் போது அவரை சார் ஆய்வாளர் கிரிமினல் குற்றவாளி போல் நடத்தியதுடன், ஆடைகளை களைந்து, அரைஞான் கயிற்றை அறுத்து லாக்கப்பில் உட்கார வைத்து வஞ்சம் தீர்த்துள்ளார். இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டி.எஸ்.பி.யுடனும் பேசிய பின்பு வெளியே விடப்பட்டுள்ளார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகையால் தாங்கள் இதுபற்றி முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும், தோழர் கே.எஸ். ஆறுமுகம் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.