தேனி
தேனி மாவட்டத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 42 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையில் குணமடைந்த நபர்கள் படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதன்கிழமை வரையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். 5 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், வியாழனன்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிந்தது. இதனையடுத்து வெள்ளியன்று மீண்டும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதிலும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. இதனையடுத்து 5 பேரும் வெள்ளியன்று மருத்துவமனை கார்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குணமடைந்து வீடுதிரும்புவர்களுக்கு வழக்கம்போல பூ ,பழங்கள், பிஸ்கெட்டுகள் மற்றும் தொடர் மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், துணை முதல்வர் எழிலரசன், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன் மற்றும் மருத்துவர்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தேனி மாறியுள்ளது. கடந்த 17ந்தேதிக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் இன்னும் இருப்பதால், தேனி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக தொடர்வது மக்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் அரசு வழிகாட்டுதலின்படி விழிப்புடன் இருந்தால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், தேனி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.